Published : 26 Dec 2020 03:16 AM
Last Updated : 26 Dec 2020 03:16 AM
பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயில் தேர்த்திருவிழா திட்டமிட்டபடி நடைபெறும், என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் ஈரோடு மாவட்டம் பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா ரத்து செய்யப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், கோபியில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், பக்தர்களின் கோரிக்கைக்கு ஏற்ப பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா திட்டமிட்டபடி நடைபெறும். அதேபோல், கோபி பகுதியில் பச்சைமலை முருகன் கோயில் கும்பாபிஷேகம் வரும் பிப்ரவரி 24-ம் தேதி நடைபெறும்’ என்றார்.
தேர்த்திருவிழா குறித்து அதிகாரிகள் கூறியதாவது;
பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயில் குண்டம், தேர்த்திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியுள்ளது. ஜனவரி 6-ம் தேதி மாவிளக்கு பூஜையும், 7-ம் தேதியன்று குண்டம் இறங்கும் நிகழ்வும் நடக்கிறது. கோயில் பூசாரிகள் மட்டும் குண்டம் இறங்க அனுமதிக்கப்படுவர். அதே நேரத்தில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய காலை 9 மணி முதல் அனுமதிக்கப்படுவார்கள். 8-ம் தேதி மாலை 4 மணிக்கு தேரோட்டமும், 9-ம் தேதியன்று மலர் பல்லக்கு உற்ஸவமும் நடக்கிறது.
தரிசனத்துக்கு வரும் பக்தர்கள், முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். திருவிழாவின் போது, தற்காலிக கடைகள் மற்றும் ராட்டினம் அமைக்க அனுமதி கிடையாது.
கோயில் வளாகம் மற்றும் வெளி மைதானத்தில், அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்க அனுமதியில்லை, எனத் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT