Published : 26 Dec 2020 03:16 AM
Last Updated : 26 Dec 2020 03:16 AM

வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு நவதிருப்பதி கோயில்களில் பெருமாள் சயனக்கோல சேவை

பெருங்குளம் மாயக்கூத்தர் .பாளையங்கோட்டை திம்மராஜபுரம் வெங்கடாஜலபதி.

தூத்துக்குடி/திருநெல்வேலி/தென்காசி

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவ திருப்பதி கோயில்களில் வைகுண்ட ஏகாதசி திருவிழா விமரிசையாக நடைபெற்றது. அதிகாலை முதலே திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

108 வைணவத் தலங் களில் வைகுண்டம் பகுதியில் தாமி ரபரணி நதிக்கரையில் 9 பெருமாள் கோயில்கள் நவதிருப்பதி தலங்களாக அமைந்துள்ளன. வைகுண்டத்தில் கள்ளபிரான், நத்தத்தில் எம்மிடர்க்கடிவான், திருப் புளியங்குடியில் காய்சினவேந்தன், பெருங்குளத்தில் மாயக் கூத்தர், இரட்டை திருப்பதியில் தேவர் பிரான், தொலைவில்லிமங் கலத்தில் செந்தாமரைக்கண்ணன், தென்திருப்பேரையில் நிகரில் முகில் வண்ணன், திருக்கோளூரில் வைத்தமாநிதி, ஆழ்வார் திருநகரியில் பொலிந்துநின்றபிரான் என்ற திருநாமங்களில் பெருமாள் அருள்பாலிக்கிறார்.

மார்கழி மாதம் வரும் ஏகாதசி திருவிழாவானது பகல்பத்து, ராப்பத்து உற்சவத்துடன் திருஅத்யயன திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. பகல்பத்தில் திருமொழி பாசுரங்களையும், இராப்பத்தில் திருவாய்மொழி பாசுரங்களையும் பாடி பெருமாளை வழிபடுவர் .

நவ திருப்பதி கோயில்களில் மார்கழி திரு அத்யயன திருவிழா கடந்த-15 ம் தேதி தொடங்கியது. 24-ம் தேதி வரை பகல் பத்து திருவிழா நடைபெற்றது. தொடர்ந்து நேற்று இராப்பத்து விழாவின் முதல்நாள் வைகுண்ட ஏகாதசியாக கொண்டாடப்பட்டது.

அதிகாலையில் நடைதிறக்கப் பட்டு ஆதிசேஷன் குடை பிடிக்க சயனக் கோலத்தில் நவதிருப்பதி பெருமாள் உற்சவமூர்த்திகள் தாயார்களுடன் காட்சியருளினார்.

வைகுண்டம் கள்ளபிரான் கோயிலில் இரவு 7 மணியளவில் சுவாமி சயன மண்டபத்தில் இருந்து புறப்பாடாகி உள்பிரகாரம் சுற்றி வந்தார். தொடர்ந்து “கோவிந்தா கோவிந்தா” கோஷம் முழங்க பரமபதவாசல் திறக்கப்பட்டு சுவாமி பல்லக்கில் எழுந்தருளினார். அப்போது அவருக்கு தீபாராதனை நடந்தது. இதுபோல், ஆழ்வார்திருநகரி தவிர மற்ற கோயில்களிலும் பரமபதவாசல் திறக்கப்பட்டது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோயில், கோவில்பட்டி சுந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோயில் களிலும் மாலையில் சொர்க்க வாசல் வழியாக பெருமாள் எழுந்தருளல் நடைபெற்றது.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை அழகிய மன்னார் ராஜகோபாலசுவாமி கோயிலில் நேற்று அதிகாலையில் பெருமாள் மற்றும் தாயார்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து அனந்த சயனக்கோலத்தில் தாயார்களுடன் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் காட்சி அருளினார். மாலை 5 மணிக்கு பரமபதவாசல் வழியாக பெருமாள் எழுந்தருளினார்.

இதுபோல் கொக்கிரகுளம் நவநீத கிருஷ்ண பெருமாள் கோயில், திம்மராஜபுரம் வெங்கடாஜலபதி கோயில், சந்திப்பு வரதராஜ பெருமாள் கோயில், தச்சநல்லூர் வரம் தரும் பெருமாள் கோயில், நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோயில், சி.என். கிராமம் நெல்லை திருப்பதி கோயில், மீனாட்சிபுரம் ராஜகோபாலசுவாமி கோயில், டவுன் கரியமாணிக்க பெருமாள் கோயில், நரசிங்க பெருமாள் கோயில், அகரம் தசாவதார பெருமாள் கோயில், முறப்பநாடு லட்சுமிநாராயண பெருமாள் கோயில், விட்டிலாபுரம் பாண்டு ரங்கன் கோயில், மன்னார்கோவில் ராஜகோபாலசுவாமி கோயில், அம்பாசமுத்திரம் புருஷோத்தம பெருமாள் கோயில், சேரன்மகாதேவி கீழ நடுத்தெரு, சென்னராஜபுரம் தெரு பெருமாள் கோயில், கல்லிடைக்குறிச்சி ஆதி வராகப் பெருமாள் கோயில்களில் காலையில் அனந்தசயனத்தில் பெருமாள் திருக்காட்சி அருளலும், மாலையில் சொர்க்கவாசல் திறப்பும் விமரிசையாக நடைபெற்றது.

தென்காசி மாவட்டம்

தென்காசி மாவட்டம், கீழப்பாவூரில் உள்ள வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோயிலில் அதிகாலை 5 மணிக்கு கோபூஜை, 6 மணிக்கு சயனம், 11 மணிக்கு கும்பம் வைத்து பல்வேறு திரவியங்களால் அபிஷேகமும், மாலை 6 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பும் நடைபெற்றது. உபவாசம் கடைபிடித்து திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x