Published : 26 Dec 2020 03:16 AM
Last Updated : 26 Dec 2020 03:16 AM
சீப்பை ஒளித்து வைத்து விட்டால், கல்யாணம் நின்று விடும் என்பது போல கிராம சபைக் கூட்டத்தின் பெயரை மாற்றுவதால் எங்கள் வெற்றியை யாரும் தடுத்துவிட முடியாது என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பொன்னை ஆற்று மேம்பாலம் சேதமடைந்துள்ளது. இதையடுத்து, பொதுப்பணித் துறை சார்பில் பராமரிப்புப் பணிகள் நடந்து வருவதை திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறும்போது, ‘‘கிராம சபை கூட்டம் என்கின்ற அந்த வார்த்தையை வேறு யாரும் பயன்படுத்தக்கூடாது என்ற அதிகாரமும் சட்டமும் இல்லை. கடந்த இரண்டு நாட்களாக திமுக நடத்திவரும் கிராமசபை கூட்டங்களில் கலந்துகொண்ட பொதுமக்களைப் பார்த்து அதிமுகவுக்கு மிகப்பெரிய ஆபத்து வரும் என்று நினைத்து கிராம சபை கூட்டம் நடத்தக் கூடாது என தடை போட்டுள்ளனர்.
நாங்கள் இதற்கான பெயரை மக்கள் சபை கூட்டம் என்று நடத்தப் போகிறோம். சீப்பை ஒளித்து வைத்து விட்டால், கல்யாணம் நின்று விடும் என்பது போல பெயரை மாற்றுவதால் எங்கள் வெற்றியை யாரும் தடுத்துவிட முடியாது.
இன்னும் சட்டபேரவை தேர்தல் தேதி அறிவிக்கவில்லை என்பதால் கூட்டணி குறித்து நாங்கள் எதுவும் பேசவில்லை. ரஜினி கட்சி ஆரம்பித்தால் கட்சியின் பெயரை செய்தி தாளில் பார்த்து தெரிந்து கொள்கிறோம்’’ என்றார். அப்போது, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் உடனிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT