Published : 22 Dec 2020 03:16 AM
Last Updated : 22 Dec 2020 03:16 AM
கிராம பஞ்சாயத்து டேங்க் ஆபரேட்டர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு அரசாணைப்படி ஊதியம் வழங்க வேண்டுமென வலியுறுத்தி ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக, கிராம பஞ்சாயத்து டேங்க் ஆபரேட்டர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் சங்க மாநில தலைவர் ஈ.வி.கே.சண்முகம், ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் 65,000 தூய்மைக் காவலர்கள் மற்றும் டேங்க் ஆப்ரேட்டர்கள் தினக்கூலிகளாக பணி செய்கின்றனர். இவர்களுக்கு, ரூ.2,600-ல் இருந்து ரூ.3,600 ஆக ஊதியத்தை உயர்த்தி, முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டார். ஆனால், அதனை அமல்படுத்தாமல், பழைய சம்பளத்தையே வழங்கி வருகின்றனர்.
இது தொடர்பாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், தற்போது, உயர்த்தப்பட்ட ஊதியத்தை வழங்கலாம் என, அரசாணை வெளியிடப் பட்டுள்ளது.
அரசாணைப்படி புதிய ஊதியம் வழங்குவதுடன், கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் நிலுவைத்தொகையையும் வழங்க வேண்டும். இதுபற்றி, ஆட்சியர் அலுவலகத்தில் முறையிட்ட போது, நிர்வாக ரீதியாக எங்களுக்கு உத்தரவும், நிதியும் வரவில்லை. அவை வந்த பின்னரே, புதிய ஊதியத்தொகை வழங்கப்படும் எனத் தெரிவித்தனர். இப்பிரச்சினைக்கு தீர்வு காண மாவட்ட ஆட்சியர் அரசிடம் பேசி, நிலுவைச் சம்பளத்தையும், புதிய சம்பளத்தையும் உடனடியாக அமலாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT