Published : 21 Dec 2020 03:16 AM
Last Updated : 21 Dec 2020 03:16 AM

பாபநாசம் அணையிலிருந்து 3,316 கனஅடி தண்ணீர் திறப்பு தாமிரபரணியில் 3-வது நாளாக நீர்வரத்து அதிகரிப்பு குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்

குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளம் குறைந்ததால் நேற்று சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.(வலது) பாபநாசம் அணையில் இருந்து 3,316 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டதால், திருநெல்வேலி கைலாசபுரம் தாமிரபரணி ஆற்றில் நேற்று கோயில்களைச் சூழ்ந்து ஓடிய தண்ணீர்.படம்: மு.லெட்சுமி அருண்

திருநெல்வேலி/ தென்காசி

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பிரதான அணையான 143 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று காலையில் 142.40 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 3,033 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணை யிலிருந்து 3,316 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.

156 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட சேர்வலாறு நீர்மட்டம் 145 அடியாகவும், 49 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட வடக்குபச்சையாறு நீர்மட்டம் 26 அடியாகவும், 22.96 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட நம்பியாறு நீர்மட்டம் 10.62 அடியாகவும் இருந்தது. 118 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 110.10 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 2,758 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 480 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. 52.50 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 27 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 40 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 40 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.

மாவட்டத்தில் அணைப்பகுதி களிலும், பிற இடங்களிலும் பெய்த மழையளவு (மி.மீட்டரில்): பாபநாசம்- 8, சேர்வலாறு- 6, மணிமுத்தாறு- 4, அம்பாசமுத்திரம்- 0.50, சேரன்மகாதேவி- 1, நாங்குநேரி- 1.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது. இதனால், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் கடனாநதி அணையில் 3 மி.மீ., கருப்பாநதி அணையில் 2 மி.மீ. மழை பதிவானது.

கடனாநதி அணை, குண்டாறு அணை ஆகியவை ஏற்கெனவே நிரம்பிவிட்டதால், இந்த அணை களுக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், 84 அடி உயரம் உள்ள ராமநதி அணையும் நிரம்பியது. பாதுகாப்பு கருதி இந்த அணை நீர்மட்டம் 82 அடியில் நிலை நிறுத்தப்பட்டு, அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. கருப்பா நதி அணை நீர்மட்டம் 66.28 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 84.25 அடியாக வும் இருந்தது.

குற்றாலத்தில் குதூகலம்

கரோனா தொற்று பரவல் காரணமாக 8 மாதங்களுக்கு மேல் குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 15-ம் தேதி முதல் தடை நீக்கப்பட்டு, அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர். தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொடர் மழை காரணமாக குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், கடந்த 2 நாட்களாக குளிக்க அனுமதிக்கப்படவில்லை. நேற்று வெள்ளப்பெருக்கு குறைந்ததையடுத்து பிரதான அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. நேற்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றாலம் அருவி ஆகியவற்றிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு காரணமாக கடும் குளிர் நிலவுகிறது. குளிரையும் பொருட்படுத்தாமல் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குற்றாலம் அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x