Published : 20 Dec 2020 03:14 AM
Last Updated : 20 Dec 2020 03:14 AM
சத்தியமங்கலம், ஜவளகிரி பகுதியில் 2 யானைகள் உயிரிழந்தது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஜீரஹள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட அருளவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் காளையா. இவர் தனது தோட்டத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்து வருகிறார். வனப்பகுதியையொட்டி இவரது தோட்டம் அமைந்துள்ளதால் அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வனவிலங்குகள் விவசாய தோட்டத்துக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்துள்ளன.
இதைத் தடுக்க காளையா தனது விவசாய நிலங்களைச் சுற்றி மின்வேலி அமைத்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை காளையா அமைத்திருந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்தது. தகவல் அறிந்த ஜீரஹள்ளி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யானையின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இறந்த ஆண் யானைக்கு 8 வயது இருக்கும்.
விசாரணையில் விவசாயத் துக்கு உபயோகப்படுத்தும் உயரழுத்த மின்சாரத்தை சட்டவிரோதமாக கம்பி வேலிக்கு அளித்ததன் காரணமாக யானை உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து விவசாயி காளையா மீது வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண் யானை உயிரிழப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள ஜவளகிரி வனச்சரகத்தில் உளிபண்டா காப்புக்காட்டில் 30 வயது மதிக்கத்தக்க பெண் யானை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது.இதுதொடர்பாக மாவட்ட வனச்சரகர் பிரபு கூறும்போது, ‘‘ஓசூர் வனக்கோட்டம் ஜவளகிரி வனச்சரகத்தில் உள்ள சூளகுண்டா பிரிவு, உளிபண்டா காப்புக்காடு பகுதியில் 18-ம் தேதி வனப்பணியாளர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது சுமார் 25 வயது முதல் 30 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று உயிரிழந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த யானை உயிரிழந்து 4 அல்லது 5 நாட்களுக்கு பின்னர் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. யானையின் உடல் வனத்துறையின் வனவிலங்கு மருத்துவக் குழுவினரால் சம்பவ இடத்திலேயே பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. உளிபண்டா காப்புக்காட்டில் உள்ள ஒரு பாறையில் இருந்து தவறி விழுந்து யானை உயிரிழந்திருப்பது பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.சத்தியமங்கலம் அருகே மின்வேலியில் சிக்கி யானை உயிரிழந்ததை வனத்துறையினர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT