Published : 19 Dec 2020 03:14 AM
Last Updated : 19 Dec 2020 03:14 AM
மதுரை மத்திய சிறையில் கைதிகளின் தற்கொலை அதிகரிப்பதற்கு கண்காணிப்புக் குறைபாடே காரணம் என சமூக ஆர்வலர் கவலை தெரிவித்துள்ளார்.
மதுரை மத்திய சிறையில் 1500-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அண்மைக்காலமாக கைதிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. அதிலும், சிறை வளாகம் கழிவறை, மருத்துவமனை பகுதி உள்ளிட்ட இடங்களில் மட்டுமே தூக்கிட்டுத் தற்கொலை செய்யும் சம்பவம் நடப்பதாகத் தெரிகிறது.
கடந்த 3 மாதங்களில் மட்டும் 4 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அக்.3-ல் ராஜபாளையம் சுடலை மாரியப்பன் (43) நவ.,1-ல் மதுரை வடபழஞ்சி திருப்பதி (36), டிச.,3-ல் திண்டுக்கல்லைச் சேர்ந்த பரணி வளவன் (33), நேற்று மதுரையைச் சேர்ந்த நாசர் (40) என 4 பேர் தற்கொலை செய்துள்ளனர். சிறைக்குள் கைதிகள் தற்கொலை செய்துகொள்வது கண்காணிப்புக் குறைபாடே காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர் மோகன் கூறியது:
சிறைக்குள் தற்கொலை அதிகரிக்கக கண்காணிப்பு குறைபாடே காரணம். மன உளைச்சலால் பாதிக்கப்படும் கைதிகளுக்குப் போதிய கவுன்சலிங் வழங்க வேண்டும். கைதிகளின் தண்டனைக் காலம் முடிந்ததும் அனுப்ப வேண்டியது சிறை நிர்வாகத்தின் பொறுப்பு.
உடல் ரீதியாக பாதிக்கப்படுவோருக்கு மருத்துவ வசதி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்போது உயிரிழக்கின்றனர். சிறை வளாகத்துக்குள் தற்கொலை செய்தாலும் அவர்கள் அங்கு இறந்ததாக தகவல் பதிவு செய்வதில்லை. மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியிலும், மருத்துவமனையிலும் இறந்ததாகவே பதிவு செய்கின்றனர். இதற்குக் காரணம் சிறை நிர்வாகத்தின் மீது குற்றம்சாட்டி விடக்கூடாது என்பதைத் தவிர்க்கவே அதிகாரிகள் இவ்வாறு செய்கின்றனர்.
சில நேரங்களில் பின்புலமிக்க கைதிகளின் துன்புறுத்தலால் கைதிகள் தற்கொலை செய்கின்றனர். சிறை நிர்வாகம் கண் காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும். தற்கொலைக்கான காரணிகளைக் கண்டறிந்து தடுக்க வேண்டும், என்று கூறினார்.
சிறைத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,
"குற்றச்செயல்களில் ஈடுபட்டுச் சிறைக்கு வரும் கைதிகள் மன உளைச்சலுக்கு ஆளாகும் வாய்ப்பு உள்ளது. இவர்களை இனம் கண்டு
கவுன்சலிங் தருகிறோம். தண்டனைக் கைதிகளுக்கு சுயதொழில் பயிற்சி, படிக்க விரும்புவோருக்குக் கல்வி கற்க வசதி என விதிகளுக்கு உட்பட்டு தேவையானவற்றைச் செய்து தருகிறோம். தற்கொலை செய்வோர் கழிவறைகளைத் தேர்ந்தெடுப்பதால் அவற்றை ஆய்வு செய்து தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இருப்பினும், ஏதாவது சூழலைப் பயன்படுத்தி தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர். அவர்களைக் காப்பாற்ற முயன்றபோதிலும் , சில நேரத்தில் முடியாமல் போய்விடுகிறது. தற்கொலைகளைத் தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும்,’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT