Published : 18 Dec 2020 03:17 AM
Last Updated : 18 Dec 2020 03:17 AM
கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பொற்பலாம்பட்டு ஏரியின் கரை உடைந்தது. இதை, கிராம மக்களே முன்னின்று சீரமைத்தனர்.
கடந்த இரு தினங்களாக பெய்த கனமழையால் கள்ளக் குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் ரிஷிவந்தியம் குறுவட்டம் பொற்பலாம்பட்டு கிராமத்தில் உள்ள ஏரி நிரம்பியுள்ளது. ஏரி நிரம்பியிருந்த நிலையில், நேற்று ஏரியின் கிழக்குப் புற கரையில் திடீரென உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வேகமாக வெளியேறியுள்ளது.
இதையறிந்த கிராம மக்கள் உடனே கால்நடைகளை பக்கத்து கிராமங்களுக்கு அப்புறப்படுத்தி விட்டு, மண் மூட்டைகளை உடைப்பு ஏற்பட்ட இடத்தில் அடுக்கி, தண்ணீர் வெளியேற்றத்தை தடுத்து நிறுத்தினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொற்பலாம் பட்டு கிராம செயலர் சண்முகம், ரிஷிவந்தியம் வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு தகவல் அளித்து, அங்கிருந்து கூடுதல் மணல் மூட்டைகளை கிராம மக்கள் உதவியுடன் கொண்டு வந்து உடைப்பு ஏற்பட்ட இடத்தில் மீண்டும் அடுக்கி வைத்தனர்.
“கடந்தாண்டு குடிமராத் துத் திட்டத்தின் கீழ் பொற்பலாம்பட்டு ஏரியை தூர்வார விவசாய சங்கம் ஒப்பந்தம் மேற்கொண்டது. ஆனால், ஏரியைதூர்வாராமலேயே, தூர் வாரியதாக கணக்கீடு செய்து, நிதியை முறைகேடாக பயன் படுத்தியிருக்கின்றனர். அவர்கள் முறையாக தூர் வாரியிருந்தால் ஏரி உடைப்பு ஏற்பட்டிருக்காது” என்று கிராம மக்கள் தெரிவித்தனர். பொற்பலாம்பட்டு கிராம மக்கள் குற்றச்சாட்டு தொடர்பாக, ரிஷிவந்தியம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகத்தை தொடர்பு கொண்டோம். அவர், பேச முன்வரவில்லை.
ஏரியை தூர் வாரியதாக கணக்கீடு செய்து, நிதியை முறைகேடாக பயன் படுத்தியிருக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT