Published : 18 Dec 2020 03:18 AM
Last Updated : 18 Dec 2020 03:18 AM

திருச்சி, சென்னை, டெல்லியில் போராட்டம் தேசிய-தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

திருச்சி

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி, திருச்சி, சென்னை, டெல்லியில் போராட்டம் நடத்தப்படும் என தேசிய-தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பி.அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.

இந்த அமைப்பின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் திருச்சி அண்ணாமலை நகரில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்குத் தலைமை வகித்த பி.அய்யாக்கண்ணு, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:

1980-க்குப் பிறகு மத்தியில் ஆட்சியில் இருந்த எந்த அரசும் விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை அளிக்கவில்லை. விவசாய விளைபொருட்களுக்கு 2 மடங்கு விலை தருவதாக பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால், அவ்வாறு விலை கொடுக்காமல் ஏமாற்றிவிட்டார். விவசாயிகள் கேள்வி எழுப்புவார்கள் என்றுதான் புதிய வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்துள்ளனர்.

தங்கள் உரிமைக்காக போராடும் விவசாயிகளை தீவிரவாதிகள், இடைத்தரகர்கள், வெளிநாட்டு தூண்டுதலின்பேரில் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் என்று ஆட்சியில் உள்ளவர்கள் அவதூறாகப் பேசுகின்றனர். உயிரைப் பணயம் வைத்துப் போராடி வரும் விவசாயிகளை மத்திய அரசு கொச்சைப்படுத்தி வருகிறது.

விவசாயி என்று கூறும் முதல்வர் பழனிசாமி, மத்திய அரசுக்கு பயந்துகொண்டு புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு சாதகமானது என்று கூறக்கூடாது. சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு எதிராக வேலை செய்யும் சூழலை தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு ஏற்படுத்திவிடக்கூடாது.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாவிட்டால், நீதிமன்றத்தில் அனுமதி பெற்று போராட்டங்களில் ஈடுபடுவோம். திருச்சி, சென்னையில் காத்திருப்புப் போராட்டத்திலும், டெல்லியில் தினமும் ஒரு விவசாயி வீதம் தற்கொலை செய்து கொள்ளும் போராட்டத்திலும் ஈடுபடுவோம். போராட்டத்தில் பங்கேற்க நாங்கள் டெல்லி செல்வதை போலீஸார் தடுக்கக் கூடாது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x