Published : 17 Dec 2020 03:18 AM
Last Updated : 17 Dec 2020 03:18 AM

நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் ஊதிய உயர்வை அமல்படுத்த வேண்டும் தூய்மை பணியாளர்கள் வலியுறுத்தல்

தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வை அமல்படுத்தக் கோரி ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. படம்: மு.லெட்சுமி அருண்

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் தலைவர் ஆர். மோகன், பொதுச் செயலாளர் எஸ்.சின்னச்சாமி, பொருளாளர் எஸ்.செல்வம் உள்ளிட்டோர் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு விவரம்:

திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சுயஉதவி குழு மற்றும் ஒப்பந்தக்காரர்கள் மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். கரோனா காலத்திலும் உயிரை துச்சமாக மதித்து உழைத்தனர். இவர்களது பணியை வேறு யாரும் செய்ய இயலாது. நிரந்தரமாக பணி செய்யும் இவர்கள் நிரந்தர தொழிலாளர்களாக இல்லை. தினக்கூலிகளாகவே உள்ளனர். இவர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி தினசரி ஊதியமாக ரூ.388 வழங்க வேண்டும். இந்த ஊதிய உயர்வை கடந்த 1.4.2020 முதல் அமல்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மாநகராட்சி ஆணையர் இந்த உத்தரவை அமல்படுத்தி, நிலுவை ஊதியத்தையும் வழங்கியிருக்கிறார்.

ஆனால் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் இந்த ஊதியம் இன்னும் வழங்கப்படவில்லை. தற்போதும் ரூ.320 முதல் ரூ.350 வரைதான் ஊதியம் வழங்கப்படுகிறது. மேலும் ஊதியத்துடன் வார விடுமுறையும் அளிக்கவில்லை. திருநெல்வேலி மாநகராட்சியிலும் ஒருநாள் கூட விடுப்பு கிடையாது. இவர்களிடம் பிடித்தம் செய்யும் இபிஎப் பணம் முழுமையாக இபிஎப் அலுவலகத்தில் செலுத்தப்பட வில்லை. இது தொடர்பாக நகராட்சி ஆணையர், பேரூராட்சி செயல் அலுவலர்களிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x