Published : 15 Dec 2020 03:15 AM
Last Updated : 15 Dec 2020 03:15 AM
திருநெல்வேலி/ தென்காசி/ தூத்துக்குடி/ நாகர்கோவில்
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், டெல்லியில்போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்குஆதரவு தெரிவித்தும், மின்சார திருத்தச்சட்டம் 2020-ஐ கைவிட வலியுறுத்தியும் விவசாய சங்கத்தினர், தொழிற்சங்கத்தினர், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக,காங்கிரஸ் கட்சியினர், ஆட்சியர் அலுவலகங்களில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்தில் போராட்ட குழுஒருங்கிணைப்பாளர் பி.பெரும்படையார், மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் காசி விஸ்வநாதன், மதிமுக மாவட்டச் செயலாளர் நிஜாம், காங்கிரஸ் மாவட்டச் செயலாளர் சங்கரபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட14 பெண்கள் உட்பட 150 பேரை போலீஸார் கைது செய்தனர். திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் ரிலையன்ஸ் மால் முன் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி தமிழ் புலிகள் மற்றும் விடுதலைசிறுத்தைகள் கட்சியினர் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் மறியல் முயற்சியில் ஈடுபட்டனர். போலீஸார் தடுத்து நிறுத்தியதால் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
நாகர்கோவில்
நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடத்துவதற்காக ஊர்வலமாக வந்தவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்ராதாகிருஷ்ணன், அகில இந்திய காங்கிரஸ்கமிட்டி உறுப்பினர் விஜய் வசந்த், மாநகரதலைவர் அலெக்ஸ், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சைமன்சைலஸ், மாவட்டதுணைத் தலைவர் முருகேசன், முன்னாள் எம்எல்ஏ லீமாறோஸ், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் கண்ணன் உட்பட 56 பேர் கைது செய்யப்பட்டனர்.
தென்காசி
தென்காசி ஆட்சியர் அலுவலகம்அருகில் அகில இந்திய விவசாயிகள் சங்கபோராட்ட ஒருங்கிணைப்புகுழு சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. வேலுமயில் தலைமை வகித்தார். முன்னாள்எம்எல்ஏ சதன் திருமலைக்குமார், மதிமுக மாவட்டச் செயலாளர் தி.மு.ராஜேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விவசாய சங்கத்தினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள தூத்துக்குடி- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் விவசாய சங்கங்களைச் சேர்ந்தவர்கள் நேற்று காலையில் திரண்டு காத்திருப்பு போராட்டம் நடத்த ஆட்சியர் அலுவலகம் நோக்கி செல்ல முயன்றனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து தேசிய நெடுஞ்சாலை அருகிலுள்ள அணுகுசாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் நல்லையா தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொருளாளர் கே.பி.பெருமாள் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுணன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் அழகுமுத்து பாண்டியன், மதிமுக வடக்கு மாவட்டச்செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் கலந்துகொண்டனர். இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்தவர்கள் அருகேயுள்ள மழைநீர் ஓடையில் இறங்கிமத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். போராட்ட குழுவினரிடம் எஸ்பி ஜெயக் குமார் பேச்சுவார்த்தை நடத்தினார்.
எட்டயபுரம் அருகேயுள்ள பிதப்புரம்கிராமத்தைச் சேர்ந்தவரும், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உறவினருமான விவசாயி ராமசுப்பு (85) என்பவர் திடீரென மயங்கி கீழே சரிந்தார். உடனிருந்த சக விவசாயிகள் மற்றும் காவல் துறையினர் அவரை மீட்டு, அந்த வழியாக வந்த ஆட்டோ மூலம் மருத்துவமனைக்கு அனுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட 26 பெண்கள் உட்பட 164 பேர் கைது செய்யப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT