Published : 13 Dec 2020 03:16 AM
Last Updated : 13 Dec 2020 03:16 AM
ஈரோட்டில் மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு பாரதி விழா நடைபெற்றது. பேரவைத் தலைவர் ஸ்டாலின் குணசேகரன் தலைமை வகித்தார். துணை தலைவர் விஜயராகவன் வரவேற்றார். சென்னை இளைஞர் இசைக்குழு கலைத்துறை இயக்குநர் டி.ராமச்சந்திரன் பேசும்போது, இசை மேதை எம்.பி.சீனிவாசனுக்கு, பாரதியார் மீது இருந்த அதீதபக்தியால், அவரது பாடல்களை சேர்ந்திசைக்குழு மூலம் மக்களிடம் கொண்டு சேர்த்தார். பாரதி எழுதிய வரிகளை உள்வாங்கி, அவர் என்ன மனநிலையில் எழுதினார் என நினைத்தே, இசை வடிவம் கொடுத்தார். அதனால் தான் இன்னும், பாரதியார் பாடல், மக்களிடம் உணர்ச்சியுடன் பாடப்பட்டு வருகிறது, என்றார்.
சேலம் பெரியார் பல்கலைக் கழக துணை வேந்தர் பொ.குழந்தைவேல் பேசியதாவது: பாரதியை பல்வேறு கோணங்களில் உணர முடியும். அதில், அறிவியல் பார்வையில் பாரதி என பார்த்தால், பன்முகத்துடன் காணப்படுகிறார். நியூட்டன், ஐன்ஸ்டீன், கணித மேதை ராமானுஜம் போன்றோர் பல்வேறு சமன்பாட்டை கண்டறிந்தனர். அவர்களது கண்டுபிடிப்பு பல காலம் விவாதிக்கப்பட்டாலும், இன்று வரை, அதே நிலையில் கண்டுபிடிப்புகள் தொடர்கிறது.
அதுபோல பாரதியார், அவ்வையார் போன்றோர் உலக அறிவை எவ்வாறு பெற்றார்கள் என்பது வியப்பானதாகவே உள்ளது, என்றார். முன்னதாக இசைக்கவி ரமணன் ஏற்புரை வழங்கினார். மேலும், இசை மேதை எம்.பி.சீனிவாசன் உருவப்படம் திறந்து வைக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT