Published : 10 Dec 2020 03:17 AM
Last Updated : 10 Dec 2020 03:17 AM

தொடர் மழையின் காரணமாக தி.மலையில் முழுமையாக நிரம்பிய வேங்கிக்கால் ஏரி பொதுமக்கள் பூஜை செய்து இனிப்புகளை வழங்கினர்

திருவண்ணாமலை வேங்கிக்கால் ஏரி நிரம்பி வெளியேறும் உபரி நீருக்கு நேற்று பூஜை செய்து வழிபட்ட பொதுமக்கள்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் 64 ஏக்கர் பரப்பளவு கொண்ட வேங்கிக்கால் ஏரி முழுமையாக நிரம்பி உபரிநீர் வெளியேறியதால், பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் பூஜை செய்து இனிப்புகளை வழங்கினர்.

திருவண்ணாமலை மாவட் டத்தில் ‘நிவர்’ மற்றும் ‘புரெவி’ புயல் தாக்கத்தால் பரவலான மழை பெய்து நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. மாவட்டத்தில் தொடர் மழையின் காரணமாகவும் தென்பெண்ணையாற்றில் இருந்துவரும் வெள்ளத்தாலும் சாத்தனூர் அணையின் நீர்மட்ட மும் உயர்ந்து வருகிறது. தி.மலையைச் சுற்றியுள்ள கீழ்நாச்சிபட்டு, நொச்சி மலை, ஏந்தல் உள்ளிட்ட ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் வெளியேறி வருகிறது.

இந்நிலையில், வேங்கிக்கால் ஏரி கடந்த ஆண்டு ‘ஜல் சக்தி’ அபியான்திட்டத்தின் கீழ் பொதுமக்களின் பங்களிப்போடு தூர் வாரப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டன. தற்போது, தொடர் மழையால் 64 ஏக்கர் பரப்பளவு கொண்ட வேங்கிக்கால் ஏரி நேற்று காலை முழு கொள்ளளவை எட்டியதுடன் உபரி நீர் வெளியேறியது. 3 ஆண்டு களுக்குப் பிறகு ஏரி நிரம்பியதால் உபரி நீர் வழிந்தோடும் பகுதியில் பொதுமக்கள் திரண்டு பால், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பொருட்களை வைத்து பூஜைகள் செய்ததுடன் மலர்களை தூவி இனிப்புகளை வழங்கினர்.

மழையளவு விவரம்

திருவண்ணாமலை மாவட் டத்தில் நேற்று காலை நிலவரப்படி ஆரணியில் 8.8, செங்கத்தில் 9, ஜமுனாமரத்தூரில் 6, வந்தவாசியில் 4.2, போளூரில் 11, தி.மலையில் 7, தண்டராம்பட்டில் 3, கலசப் பாக்கத்தில் 2, சேத்துப்பட்டில் 15, கீழ்பென்னாத்தூரில் 5.8, வெம்பாக்கத்தில் 16 மி.மீ மழை பதிவாகி யுள்ளன.

அணைகள் விவரம்

தி.மலை மாவட்டத்தில் மிகப் பெரிய அணையான சாத்தனூர் 119 அடி உயரத்துடன் 7,321 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது. தற்போதைய நிலையில் 96.40 அடி உயரத்துடன் 3,249 மில்லியன் கன அடிக்கு நீர் இருப்பு உள்ளது. அணைக்கு 1,006 கன அடி வீதம் நீர்வரத்து உள்ளது.

குப்பநத்தம் அணை 60 அடி உயரத்துடன் 700 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது. தற்போதைய நிலையில் 35.42 அடி உயரத்துடன் 226 மில்லியன் கன அடிக்கு நீர் இருப்பு உள்ளது. அணைக்கு 186.51 கன அடி வீதம் நீர்வரத்து உள்ளது. மிருகண்டாநதி அணை 22.97 அடி உயரத்துடன் 87 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது.

தற்போதைய நிலையில் 20.01 அடி உயரத்துடன் 67 மில்லியன கன அடி கொள்ளளவாக இருக்கிறது. அணைக்கு 56 கன அடி வீதம் நீர்வரத்து இருக்கும் நிலையில் அணையில் இருந்து பாசனத்துக்காக 30 கன அடி வீதம் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. செண்பகத்தோப்பு அணை 62.32 அடி உயரத்துடன் 287 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது.

தற்போதைய நிலையில் 57 அடி உயரத்துடன் 233.028 மில்லியன் கொள்ளளவு நீர் இருப்பு உள்ளது. அணைக்கு 400 கன அடி வீதம் நீர்வரத்து இருக்கும் நிலையில் அணையில் இருந்து 400 கன அடி வீதம் ஷட்டர்களின் வழியாக நீரை வெளியேற்றி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x