Published : 08 Dec 2020 03:14 AM
Last Updated : 08 Dec 2020 03:14 AM
திங்கள்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டம்தென்காசி மாவட்டத்தில் காணொலி காட்சி மூலம் நேற்று நடைபெற்றது. மாவட்டஆட்சியர் சமீரன் தலைமை வகித்தார். அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
மனுக்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளை துணை ஆட்சியர் நிலையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சிவகிரி அருகே உள்ள தும்பைமேடு கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில், ‘தமிழக அரசின் இலவச மாட்டுக் கொட்டகை அமைக்கும் திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏதும் ஏற்படுத்தாமல் அதிகாரிகள் முறைகேடாக வசதி படைத்தவர்களுக்கு அமைக்க ஏற்பாடு செய்தனர். பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக இத்திட்டம் நிறுத்தப்பட்டது. தகுதியான பயனாளிகளை தேர்வு செய்து, இலவச மாட்டுக் கொட்டகை அமைத்துக் கொடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.
இலஞ்சி திமுக செயலாளர் முத்தையா அளித்துள்ள மனுவில், ‘சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து இலஞ்சியில் கட்டப்பட்ட கலையரங்கில் கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது. அதில், அரசு பதவியில் வேறு நபர் இருக்கும் நிலையில், மற்றொருவர் பெயரில் பதவியை போட்டு கல்வெட்டில் எழுதியுள்ளனர். அந்த கல்வெட்டை நீக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
சொக்கம்பட்டி விவசாயிகள் சார்பில் முருகன் அளித்துள்ள மனுவில், ‘கருப்பாநதிக்கு உட்பட்ட வைரவன்குளம், சின்ன கருஞ்சிவனேரி குளம், பெரிய கருஞ்சிவனேரி குளம் ஆகிய குளங்களுக்குதண்ணீர் வரும் கால்வாய் தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
இதனால், அதிகமாக தண்ணீர் வரும்போது விளைநிலங்களில் புகுந்து பயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT