Published : 06 Dec 2020 03:16 AM
Last Updated : 06 Dec 2020 03:16 AM

வீடூர் அணையில் உபரி நீர் திறப்பு

திண்டிவனம் அருகே வீடூர் அணையின் உபரி நீர் 6 மதகுகள் மூலம் ஒரு மணி நேரம் திறந்து விடப்பட்டது.

விழுப்புரம்

கடந்த வாரம் ‘நிவர்’ புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து 3 நாட்களாக கனமழை பெய்தது. தொடர்ந்து கடந்த 3 நாட்களாக பெய்துவரும் வடகிழக்கு பருவ மழையினால் ஏரி, குளங்கள், அணைகள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன.

அந்த வகையில், விழுப்புரம் அருகே உள்ள வீடூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான செஞ்சி, மேல்மலையனூர் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. கனமழையால் தொண்டி ஆறு, வராக நதியிலிருந்து வீடூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் காலை 7 மணி நிலவரப்படி, விநாடிக்கு 1771 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேற்று அதிகாலை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 32 அடியில், 31.600 அடி நிரம்பியது. இதையடுத்து, விநாடிக்கு 405 கன அடி தண்ணீர் 3 மதகுகள் மூலம் வெளியேற்றப்பட்டது. இதற்கிடையே நீர் வரத்து மேலும் அதிகரித்ததால், காலை 10 மணி முதல் 11 மணிவரை 6 மதகுகள் திறக்கப்பட்டு, மதகுக்கு விநாடிக்கு 500 கன அடி வீதம் 300 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அதன்பின் ஒரு மதகு மட்டும் திறக்கப்பட்டு விநாடிக்கு 300 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது அணையில் நீர் இருப்பு 573.699 கன அடியாக உள்ளது. வீடுர் அணையின் மூலம் தமிழகத்தில் 2,200 ஏக்கர், புதுச்சேரி மாநிலத்தில் 1,000 ஏக்கர் என 3,200 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x