Published : 04 Dec 2020 03:16 AM
Last Updated : 04 Dec 2020 03:16 AM
ரேஷன்கடைகளில் அனைத்து கார்டுகளுக்கும் கொண்டைக் கடலை வழங்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள கார்டுதாரர்களுக்கு, ஜூலை மாதம் முதல் மாதம் ஒரு கிலோ கொண்டைக்கடலை வழங்க மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால், இத்திட்டம் இந்த மாதம் முதல் செயல்படுத்தப்படும் நிலையில், நிலுவை மாதங்களுக்கான கடலையையும் சேர்த்து கார்டுதாரருக்கு தலா 5 கிலோ கொண்டைக் கடலை வழங்கப்பட்டு வருகிறது. ஏஏஒய் மற்றும் பிஹெச்ஹெச் எனக் குறிப்பிடப்பட்டுள்ள வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் கொண்டைக்கடலை வழங்கப்படுகிறது. இதர கார்டுதாரர்களுக்கு கொண்டைக்கடலைக்கு மாற்றாக துவரம் பரும்பு வழங்கப்படுகிறது.
இந்நிலையில் அனைத்து கார்டுதாரர்களுக்கும் கொண்டைக்கடலை வழங்க வேண்டுமெனக் கோரி பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் சத்தியமங்கலம் ரேஷன்கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்தியூர் புதுக்காடு பகுதியில் ரேஷன்கடையை நேற்று முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம் நடத்தினர். கொண்டைக் கடலையை அனைத்து தரப்பினரும் பயன்படுத்துவார்கள் என்பதால், பாரபட்சமின்றி அனைத்து கார்டுதாரர்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT