Published : 04 Dec 2020 03:16 AM
Last Updated : 04 Dec 2020 03:16 AM
அரியலூரில் இயங்கி வரும் அரசு சிமென்ட் ஆலை சுண்ணாம்புக்கல் சுரங்கத்துக்கு நிலம் அளித்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.
அரியலூரை அடுத்த கயர்லாபாத் கிராமத்தில் இயங்கி வரும் அரசு சிமென்ட் ஆலையின் சுண்ணாம்புக்கல் சுரங்கத்துக்காக ஆனந்தவாடி கிராமத்தில் 161 விவசாயிகளிடமிருந்து 270 ஏக்கர் நிலத்தை 1982-ம் ஆண்டு ஆலை நிர்வாகம் கையகப்படுத்தியது. அப்போது, கல்வி அடிப்படையில் நிலம் கொடுத்த விவசாயிகளின் குடும்பத்தில் ஒருவருக்கு சிமென்ட் ஆலையில் வேலை வழங்கப்படும் என ஆலை நிர்வாகம் தெரிவித்தது.
இந்நிலையில், தொடர் போராட்டங்களுக்கு பிறகு கடந்தாண்டு ஒப்பந்த அடிப்படையில் 57 பேருக்கு வேலை வழங்கப்பட்டது. மீதமுள்ளோருக்கு வேலை வழங்கக் கோரியும், ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்வோரை நிரந்தரம் செய்யக் கோரியும் தமிழ்ப்பேரரசு கட்சி பொதுச் செயலாளர் கவுதமன் தலைமையில் நவ.30-ம் தேதி ஆனந்தவாடி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்திருந்தார்.
அதன்படி, அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று ஆனந்தவாடி கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், அமைச்சர் எம்.சி.சம்பத், தமிழ்ப் பேரரசு கட்சி பொதுச் செயலாளர் கவுதமன் மற்றும் கிராம மக்கள் கலந்துகொண்டனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தது: நிலம் அளித்த விவசாயிகளின் குடும்பத்தில் 57 பேருக்கு இதுவரை வேலை வழங்கப்பட்டுள்ளது.
ஜன.15-ம் தேதிக்குள் மேலும் 25 பேருக்கு வேலை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொங்கலுக்கு பிறகு ஏற்கெனவே தற்காலிக வேலையில் அமர்த்தப்பட்டுள்ளவர்களை, தகுதியின் அடிப்படையில் நிரந்தர வேலையில் அமர்த்த முதல்வரிடம் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும். அதேபோல, ஆலையில் காலிபணியிடங்களை நிரப்பும்போது, நிலம் அளித்த ஆனந்தவாடி கிராம மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
அரியலூர் மாவட்டத்தில் சிமென்ட் ஆலைகளுக்கு செல்லும் லாரிகளால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க, தனி சாலை அமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
பேச்சுவார்த்தையின்போது, அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர் த.ரத்னா, எம்எல்ஏ-க்கள் ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம், ஆர்.டி.ராமச்சந்திரன், மாவட்ட எஸ்பி ஆர்.னிவாசன். தமிழ்நாடு சிமென்ட் நிறுவன மேலாண்மை இயக்குநர் கே.வி.முரளிதரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக, கால்நடைப் பராமரிப்புத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 2,625 பேருக்கு ரூ.1.84 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT