Published : 02 Dec 2020 03:15 AM
Last Updated : 02 Dec 2020 03:15 AM
ஏறத்தாழ 30 ஆண்டுகளாக வறண்டு கிடக்கும் செலக்கரிச்சல் குட்டையின் நீர்வழிப்பாதைகளை ஆக்கிரமித்துள்ள வழித்தடங்களை அகற்ற வேண்டுமென விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து கோவை மாவட்டம் சூலூர் அருகேயுள்ள செலக்கரிச்சல் கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அ.திருநாவுக்கரசு `இந்து தமிழ்' செய்தியாளரிடம் கூறியதாவது:
செலக்கரிச்சல் கிராமத்தில் அமைந்துள்ள கருவேலங்குட்டை, சுமார் 36 ஏக்கர் பரப்பு கொண்டது. ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கும் மேலாக இக்குட்டை வறண்டு கிடக்கிறது. இந்தக் குட்டையில் தண்ணீர் தேங்கியிருந்த காலத்தில் லட்சுமிநாயக்கன்பாளையம், செலக்கரிச்சல், அப்பநாயக்கன்பாளையம், கரடிவாவி, மல்லைக் கவுண்டனூர், புளியமரத்துப்பாளையம் உள்ளிட்ட 10 கிராமங்களைச் சேர்ந்த 5,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்றன. இதன் மூலம் மக்காச்சோளம், தக்காளி, கத்தரிக்காய், பீட்ரூட் போன்ற காய்கறிகள், சிறுதானியங்கள் சாகுபடி செய்யப்பட்டன. சில தென்னந்தோப்புகளும் பயனடைந்தன. இந்நிலையில், இக்குட்டை நீராதாரமின்றி வறண்டதால், விவசாய நிலங்கள் பாசன வசதியை இழந்தன.
லட்சுமிநாயக்கன்பாளையத்தில் இருந்து செலக்கரிச்சல், புளியமரத்துப்பாளையம் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக கருவேலங்குட்டைக்கு நீர்வழிப்பாதைகள் அமைந்துள்ளன. சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்யும் மழைநீர் இந்த நீர்வழிப்பாதைகள் வழியாக வழிந்தோடி, குட்டையை சென்றடையும். ஆனால், நீர்வழிப்பாதைகளைத் தடுக்கும் வகையில் தற்போது குறுக்கே ஆங்காங்கு வழித்தடங்கள் அமைத்து, நீர்வழிப்பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால் குட்டைக்கான தண்ணீர் வரத்து தடைபட்டுள்ளது. நீர்வழிப்பாதைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி, பயனற்றுக் கிடக்கிறது.
இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டால், மழைக் காலங்களில் கொஞ்சமாவது மழை நீர் குட்டையை வந்தடையும். நீர்வழிப் போக்குவரத்து சீரானால், அதையொட்டிய நிலங்களும் பயனடையும். எனவே, ஆக்கிரமிப்பு வழித் தடங்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT