Published : 01 Dec 2020 03:16 AM
Last Updated : 01 Dec 2020 03:16 AM

காவிரியில் நீர் வரத்து குறைவால் ஈரோட்டில் உள்ள 7 கதவணைகளில் மின் உற்பத்தி நிறுத்தம்

ஈரோடு

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளதால், ஈரோட்டில் உள்ள 7 கதவணை களிலும் மின்சார உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து, டெல்டா பாசனத்துக்காக திறக்கப்படும் நீர் ஈரோடு மாவட்டத்தைக் கடந்து செல்கிறது. ஈரோடு மாவட்டத்தில் பயணிக்கும் காவிரி ஆற்றின் குறுக்கே செக்கானூர், குதிரைக்கல் மேடு, நெரிஞ்சிப்பேட்டை, ஊராட்சிக் கோட்டை, பிராமண பெரிய அக்ரஹாரம், வெண்டி பாளையம், பாசூர் ஆகிய 7 இடங்களில் கதவணை கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு கதவணையிலும் தலா 15 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் இரண்டு இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

நீர்திறப்பு நிறுத்தம்

இந்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் பாசனத்துக்காக திறக்கப்பட்டு வந்த நீர் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது குடிநீருக்கு மட்டும் விநாடிக்கு 500 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

பழுது பார்க்க கோரிக்கை

இதனால் ஆற்றில் நீர்வரத்து குறைந்து, கதவணைகளில் நீர் தேங்குவதும் குறைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து 7 கதவணைகளிலும் மின்சார உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ள நிலையில், கதவணைகளில் உள்ள பழுதுகளை நீக்கவும், ஆகாயத்தாமரைகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x