Published : 30 Nov 2020 03:10 AM
Last Updated : 30 Nov 2020 03:10 AM
கொடுமுடியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளைத் தொடர்ந்து மீட்புப்பணிகள் நடந்த நிலையில், அங்கு இயல்பு நிலை திரும்பியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் வரலாறு காணாத வகையில், இருதினங்களுக்கு முன் 33.44 செ.மீ. மழை பெய்தது. இதில், சென்னசமுத்திரம் வருந்தியாபாளையத்தில் காலிங்கராயன் வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டது. கொடுமுடி ரோஜா நகர், எஸ்.பி.என். நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ள நீர் புகுந்தது. இதேபோல், கொடுமுடி ரயில்வே நுழைவு பாலத்தில் வெள்ள நீர் தேங்கி வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
வெள்ள பாதிப்பு பகுதிகளை ஈரோடு ஆட்சியர் சி.கதிரவன், மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.கவிதா, மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. சிவசுப்பிரமணி உள்ளிட்டோர் பார்வையிட்டு, நிவாரணப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டனர். இதன் தொடர்ச்சியாக, கொடுமுடி சின்னப்பையன்புதூர் காலிங்கராயன் வாய்க்காலில் உள்ள ஆகாயத்தாமரைகள் நேற்று அகற்றப்பட்டன. அதேபோல், காலிங்கராயன் வாய்க்கால் மற்றும் நாகமநாயக்கன்பாளையம் காலிங்கராயன் கழிவு நீர் வாய்க்கால் ஆகியவை சரிசெய்யப்பட்டது.
கொடுமுடி எஸ்.எஸ்.வி. மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வெள்ள நிவாரண முகாமில் தங்கியிருந்தோருக்கு நேற்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், கொடுமுடி ரயில்வே நுழைவு பாலத்தில் தேங்கிய நீர் முழுவதும் நேற்று அப்புறப்படுத்தப்பட்டு, வாகனங்கள் செல்ல வழி ஏற்படுத்தப்பட்டது. தாழ்வான பகுதிகளில் தேங்கிய வெள்ளநீர் வடிந்த நிலையில், முகாமில் உள்ளவர்கள் வீடு திரும்பியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT