Published : 28 Nov 2020 03:17 AM
Last Updated : 28 Nov 2020 03:17 AM

விவேகானந்தரின் கொள்கையை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்ல அறிவுறுத்தல்

நாகாச்சி ராமகிருஷ்ண மடத்தின் உணவுக் கூடத்தில் சாரதா தேவியின் உருவப் படத்தைத் திறந்து வைத்த சுவாமி கமலாத்மானந்தாஜி மகராஜ். அருகில் உயர் நீதிமன்ற நீதிபதி பி.புகழேந்தி.

ராமநாதபுரம்: சுவாமி விவேகானந்தரின் கொள்கையை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என சுவாமி கமலாத்மானந்தாஜி மகராஜ் அறிவுறுத்தினார்.

ராமநாதபுரம் அருகே நாகாச்சியில் ராமகிருஷ்ண மடத்தின் புதிய கிளையில் சமுதாயக் கூடம், பிரார்த்தனைக் கூடம், உணவுக்கூடம் மற்றும் சுவாமி விவேகானந்தர் சிலைத் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பங்கேற்ற மதுரை ராமகிருஷ்ண மடத்தின் நிர்வாகி சுவாமி கமலாத்மானந்தாஜி மகராஜ் பேசியதாவது: இந்தியா புண்ணிய, ஆன்மிக பூமியாகவே இறைவனால் படைக்கப்பட்டது. மனிதர்களின் பிறவிப் பிணியை அகற்ற அவதரித்தவர் சுவாமி ராமகிருஷ்ணர். தமிழகத்துக்கும், சுவாமி விவேகானந்தருக்கும் உள்ள தொடர்புகள் ஏராளம்.

ராமநாதபுரம் பாஸ்கர சேதுபதி மன்னரே சுவாமி விவேகானந்தர் சிகாகோ சென்று இந்து மதத்தின் பெருமையை உலகுக்கு உணர்த்தக் காரணமாக விளங்கினார். சிகாகோ சொற்பொழிவை முடித்துவிட்டு, ராமநாதபுரம் திரும்பிய சுவாமி விவேகானந்தர் ஆற்றிய உரையில்தான் இந்திய தேசத்தின் எதிர்கால வளர்ச்சிக்கான காரணங்களைக் குறிப்பிட்டார். சுவாமி விவேகானந்தரின் கொள்கை என்பது தொடர் ஓட்டம் போன்றது.

ஆகவே, அந்த தொடர் ஓட்டத்தில் அனைவரும் பங்கேற்று சுவாமி விவேகானந்தரின் கொள்கையை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்ல வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x