Published : 27 Nov 2020 07:21 AM
Last Updated : 27 Nov 2020 07:21 AM
திருச்சி/ புதுக்கோட்டை/ அரியலூர்/ பெரம்பலூர்/ கரூர்
மத்திய அரசைக் கண்டித்தும், புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர் மாவட்டங்களில் சாலை மறியல், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. திருச்சி, புதுக்கோட்டை, கரூரில் மறியலில் ஈடுபட்ட 927 பேர் கைது செய்யப்பட்டனர்.
தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் மக்கள் விரோதப் போக்குடன் நடந்துகொள்வதாக மத்திய அரசைக் கண்டித்தும், விவசாயிகளுக்கு எதிரான புதிய வேளாண் சட்டங்களையும், பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாக திருத்தப்பட்ட தொழிலாளர் நலச் சட்டங்களையும், புதிய கல்விக் கொள்கையையும் திரும்பப் பெற வேண்டும். பொதுத் துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்துக்கு பல்வேறு தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு அழைப்பு விடுத்திருந்தது.
அதன்படி, திருச்சி கன்டோன்மென்ட் ஒத்தக்கடை பகுதியில் உள்ள எல்ஐசி அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபடுவதற்காக பல்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த கூட்டமைப்பினர் பாரதிதாசன் சாலையில் உள்ள மாநகராட்சி மைய அலுவலகம் முன் நேற்று திரண்டனர். அங்கிருந்து ஒத்தக்கடை நோக்கி ஊர்வலமாகச் சென்ற அவர்களை வழியிலேயே போலீஸார் தடுத்து நிறுத்தியதால், முத்தரையர் சிலை அருகே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தொமுச, ஐஎன்டியுசி, சிஐடியு, ஏஐடியுசி, ஏஐஒய்எஃப், எஸ்டியு, எச்எம்எஸ், எம்எல்எஃப், எல்எல்எஃப், டிடிஎஸ்எஃப், ஏஏஎல்எல்எஃப் மற்றும் மக்கள் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள், அமைப்புகளைச் சேர்ந்த பெண்கள் 80 பேர் உட்பட 650 பேரை போலீஸார் கைது செய்தனர்.
மேலும், 100 நாள் வேலை உறுதித் திட்டத்தை பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். ஆன்லைன் மூலம் ஆட்டோ தொழிலாளர்கள் அறியாத வகையில் அபராதம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும். கட்டுமானத் தொழிலாளர் நலவாரிய ஆன்லைன் பதிவை எளிமையாக்க வேண்டும். பெண் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு 50 வயதிலேயே ஓய்வூதியம் வழங்க வேண்டும். மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தப்பட்ட 288ஏ-வைக் கைவிட வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் இப்போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
இதேபோல, திருச்சி மாவட்டத்தில் ஜீயபுரம், உப்பிலியபுரம், வையம்பட்டி, திருவெறும்பூர், துவரங்குறிச்சி, தா.பேட்டை, துறையூர் உட்பட பல்வேறு இடங்களில் தொழிற்சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி தென்னூரில் உள்ள மின் வாரிய அலுவலகம் முன்பு நேற்று மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழுவினர் நடத்திய ஆர்ப்பாட்டத்துக்கு, சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரங்கராஜன் தலைமை வகித்தார். தொமுச மாநில துணைத் தலைவர் மலையாண்டி, தொழிலாளர்- பொறியாளர் ஐக்கிய சங்க நிர்வாகி ராஜமாணிக்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் சங்கத்தினரும், பொது வேலைநிறுத்தத்தில் பங்கேற்றதால் பெரும்பாலான வங்கிக் கிளைகள் மூடப்பட்டிருந்தன. இந்தியன் வங்கி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஊரக வளர்ச்சி வங்கி ஊழியர் சங்க மாநிலத் தலைவர் ராமதுரை தலைமை வகித்தார். மாவட்ட வங்கி ஊழியர் சங்க துணை பொதுச் செயலாளர் அருணாசலம், கனரா வங்கி ஊழியர் சங்க செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், இந்தியன் வங்கி ஊழியர் சங்க நிர்வாகி ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதேபோல, காப்பீட்டுக் கழக அலுவலகங்களிலும் பெரும்பாலான ஊழியர்கள் வேலைக்குச் செல்லவில்லை. பகலில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டதால், அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் எந்தப் பாதிப்பும் இல்லை.
அரியலூர் மாவட்டத்தில்...
பெரம்பலூர் மாவட்டத்தில்...
பெரம்பலூர் மாவட்ட தொழிற்சங்கங்கள் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் எஸ்.அகஸ்டின் தலைமை வகித்தார். தொழிற்சங்க நிர்வாகிகள் செல்லதுரை, ராஜாங்கம், ரங்கநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதேபோல, பெரம்பலூர் மாவட்ட ஆட்டோ தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர்.
கரூர் மாவட்டத்தில்...
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment