Published : 25 Nov 2020 03:15 AM
Last Updated : 25 Nov 2020 03:15 AM
பாவனிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்கு, குடிநீருக்கும் திறக்கப்படும் நீரினை, கரைகளில் துளையிட்டு முறைகேடாக எடுக்கும் போலி விவசாயக் குழுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொடிவேரி பாசனசபை வலியுறுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபியில் கொடிவேரி அணை பாசனதாரர்கள் சங்கத்தின் இருபத்தொரு சபைகளின் ஆலோசனைக் கூட்டம், சபைத் தலைவர் சுபி.தளபதி தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
கொடிவேரி அணை பாசனத்துக்கு உட்பட்ட தடப்பள்ளி - அரக்கன்கோட்டை வாய்க்கால்களை சீரமைத்தல், புதுப்பித்தல் போன்ற பணிகளுக்காக ரூ. 147.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணியை அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கி, ஏப்ரல் இரண்டாவது வாரத்திற்குள் முடிக்க வேண்டும் எனவும், ஏப்ரல் இறுதியில் இரண்டாம் போகத்திற்கான நீரினை திறக்க அரசிடமும், பொதுப்பணித்துறையிடம் உறுதியளிப்பு கோருவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், இப்பணிகளை ஆய்வு செய்ய அனைத்து பாசன சபைகளும் அடங்கிய ஒரு குழுவை நியமிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
கொடிவேரி பாசனத்தில் முதல் போக நெல் அறுவடை, டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்கும் என்பதால், டிசம்பர் 10-ம் தேதி முதல் நெல் கொள்முதல் நிலையங்களை தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், விவசாய குழுக்கள் என்ற பெயரில் போலியாக சங்கங்களை உருவாக்கி, பாசன வாய்க்கால்களில் இருந்தும், பாசனத்துக்கும் குடிநீருக்கும், ஆற்றில் விடப்படுகிற நீர் முறைகேடாக கரைகளில் துளையிட்டு திருடப்படுகிறது. இதற்காக, மின் மோட்டார்களுக்கு இலவச மின் இணைப்புகள் , சாலை வழி ராட்சத குழாய் கொண்டு செல்ல அனுமதி ஆகியவை கடந்த சில மாதங்களாக வழங்கப்படுகிறது. அனைத்து துறை சட்ட விதிமுறைகளை மீறியும், நீதிமன்ற தீர்ப்புகளை அவமதித்தும் மின் வாரியம் மற்றும் பொதுப்பணித் துறையால் இந்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக கொடிவேரி மற்றும் காலிங்கராயன் பாசனங்கள் மற்றும் கூட்டு குடிநீர் திட்டங்கள் அனைத்தும் எதிர்வரும் ஆண்டுகளில் அழியும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே உடனடியாக மேற்கண்ட அனுமதிகள் ரத்து செய்யப்பட வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT