Published : 21 Nov 2020 03:17 AM
Last Updated : 21 Nov 2020 03:17 AM

கரும்புக்கு நிலுவைத் தொகை வழங்காத சர்க்கரை ஆலை நிர்வாகம் உயர் அதிகாரிகளுக்கு தென்காசி ஆட்சியர் கடிதம்

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் காணொலி காட்சி மூலம் நேற்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வேளாண் அதிகாரிகள் கூறியதாவது:

தென்காசி மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழை அளவு 814 மி.மீ. ஆகும். நவம்பர் மாதம் வரை இயல்பான மழை அளவு 738 மி.மீ. இந்த ஆண்டில் இதுவரை 671 மி.மீ. மழை பெய்துள்ளது. இது, இயல்பான அளவை விட குறைவு. நவம்பர் மாதத்தில் 208 மி.மீ. மழை பெய்யும். இந்த ஆண்டில் நவம்பர் மாதத்தில் இதுவரை 206 மி.மீ. மழை பெய்துள்ளது. கடந்த 5 நாட்களாக பெய்த மழையால் அணைகளில் 80 சதவீத அளவுக்கு நீர் இருப்பு உள்ளது. குளங்களில் தண்ணீர் நிரம்பி வருகிறது. 84 குளங்களில் ஒரு மாதத்துக்கு மேல் பாசனத்துக்கு கிடைக்கும் அளவுக்கு தண்ணீர் உள்ளது. கிணறுகளில் சராசரியாக 2 முதல் இரண்டரை மணி நேரத்துக்கு தினமும் பாசனத்துக்கு கிடைக்கும் அளவுக்கு தண்ணீர் இருப்பு உள்ளது.

விதைகள் ஆய்வு

நடப்பாண்டில் அக்டோபர் வரை 5,049 ஹெக்டேரில் நெல், 9,887 ஹெக்டேரில் சிறுதானிய பயிர்கள், 3,449 ஹெக்டேரில் பயறு வகைப் பயிர்கள், 843 ஹெக்டேரில் பருத்தி, 1,612 ஹெக்டேரில் கரும்பு, 1,232 ஹெக்டேரில் எண்ணெய் வித்துப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 94 ஆயிரத்து 860 ஹெக்டேரில், இதுவரை 22 ஆயிரத்து 803 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

விதைகளை ஆய்வு செய்ததில் 25 மாதிரிகள் தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ளன. இதில் 22 மாதிரிகள் தொடர்பாக துறை ரீதியாகவும், மற்றவை குறித்து சட்ட ரீதியாகவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உரங்களில் 322 மாதிரிகள் எடுக்கப்பட்டு, 296 மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில், 16 மாதிரிகள் தரமற்றவை என கண்டறியப்பட்டு, அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

உரங்கள் இருப்பு

நெல் விதைகள் 177 டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. 145 டன் விதைகள் இருப்பு உள்ளது. 123 டன் பயறு வகை விதைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. 30 டன் கையிருப்பு உள்ளது. 3,457 டன் யூரியா உரம் இருப்பு உள்ளது. 967 டன் டிஏபி, 3,248 டன் காம்ப்ளக்ஸ், 896 டன் பொட்டாஸ் உரங்கள் இருப்பு உள்ளன. கூட்டுறவு சங்கங்கள் மூலம் உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப உயிர் உரங்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

2016-17 மற்றும், 2017-18ம் ஆண்டுகளில் பயிர் காப்பீட்டுத் தொகையில் நிவாரணம் கிடைக்காத விவசாயிகளுக்கு இந்த மாத இறுதிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2018-19ம் ஆண்டில் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆட்சியர் கடிதம்

2018-19ம் ஆண்டில் தரணி சர்க்கரை ஆலைக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை 21.7 கோடி ஆலை நிர்வாகத்தால் வழங்கப் படாமல் உள்ளது. அக்டோபர் 30-ம் தேதிக்குள் நிலுவைத் தொகையை வழங்குவதாக ஆலை நிர்வாகம் உறுதியளித்தது. ஆனால் நிலுவைத் தொகை வழங்கப்படாததால், மாவட்ட ஆட்சியர் மூலம் தமிழக அரசின் தொழில்துறை முதன்மைச் செயலாளர், வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. மேலும் சர்க்கரை ஆலை நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டு, தெளிவுரை கேட்கப்பட்டுள்ளது” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x