Published : 21 Nov 2020 03:17 AM
Last Updated : 21 Nov 2020 03:17 AM

கூந்தன்குளத்தில் பறவைகளை பாதுகாப்பவருக்கு இயற்கை பாதுகாவலர் விருது வழங்கல்

கூந்தன்குளத்தில் பறவைகள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள பால்பாண்டிக்கு ‘இயற்கை பாதுகாவலர் விருது’ பாளையங்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.

திருநெல்வேலி

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக செயல்பட்டுவரும் தனிநபர் அல்லது நிறுவனத்துக்கு கடந்த 4 ஆண்டுகளாக பெல்பின்ஸ் ஏட்ரி இயற்கை பாதுகாவலர் விருது வழங்கப்பட்டது. இவ்வாண்டு க்கான 5-வது விருது வழங்கும் விழா பாளையங் கோட்டையில் நடைபெற்றது. கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் மற்றும் அவற்றின் வாழிடங்கள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள பால்பாண்டி என்பவருக்கு விருது வழங்கப்பட்டது.

கூடுகளில் இருந்து தவறி விழும் குஞ்சுகளை மீட்டு வைத்தியம் பார்ப்பதோடு, அவை பறக்கும் திறனை பெறும்வரை கவனித்துக் கொள்கிறார். இவரும், இவருடைய மனைவி வள்ளித்தாயும் இணைந்து ஆயிரக்கணக்கான குஞ்சுகளை காப்பாற்றி உள்ளனர். கூந்தன்குளத்துக்கு வரும் மாணவர்கள் மற்றும் பறவையியலாளர்களுக்கு பறவைகள் குறித்த களப்பயிற்சியை பால்பாண்டி அளித்து வருகிறார். கூந்தன்குளம் சுற்றுவட்டாரத்தில் இதுவரை 327 சிற்றினங்கள் சார்ந்த பறவைகளை இவர் பதிவு செய்துள்ளார்.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை வனப்பாதுகாவலர் எம்.ஜி.கணேசன், திருநெல்வேலி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சத்தியவள்ளி ஆகியோர் விருதை வழங்கினர். சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ.தர்மன், இயற்கை பாதுகாப்பு தொடர்பாக உரையாற்றினார். தாமிரபரணி நீர்நிலைகளில் காணப்படும் பறவைகள் மற்றும் தமிழகத்தில் காணப்படும் பாம்புகள் குறித்த வண்ண சுவரொட்டிகள் வெளியிடப்பட்டன.

பெல் நிறுவனத் தலைவர் குணசிங் செல்லத்துரை, ஏட்ரி நிறுவன மூத்த விஞ்ஞானி ரெ.கணேசன், மூத்த ஆராய்ச்சியாளர் எம்.மதிவாணன், திருநெல்வேலி ரோட்டரி சங்கத் தலைவர் ஆன்டனி பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவரும், இவருடைய மனைவியும் இணைந்து ஆயிரக்கணக்கான பறவை குஞ்சுகளை காப்பாற்றி உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x