Published : 20 Nov 2020 03:15 AM
Last Updated : 20 Nov 2020 03:15 AM
கால்நடைகளுக்கு பெரியம்மை நோய் அறிகுறிகள் இருப்பின், அருகில் உள்ள கால்நடை மருந்தகங்கள் மற்றும் மருத்துவமனைகளை விவசாயிகள் அணுகி சிகிச்சை பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஈரோடு மாவட்டத்தில் மாடுகளுக்கு பெரியம்மை நோய் அதிக அளவில் பரவி வருகிறது. வைரஸ் கிருமியால் ஏற்படும் இந்நோய் ஈ, கொசு, உண்ணி மூலமாகவும், கறவையாளர், கன்றுக்குட்டிகள் பாதிக்கப்பட்ட மாட்டின் பாலை அருந்துவதாலும், நோய் பாதிப்பு உள்ள இடங்களில் இருந்து நோயற்ற பகுதிகளுக்கு கால்நடைகள் வந்து செல்வதாலும் பரவுகிறது.
கால்நடைகளுக்கு கண்ணில் நீர் வடிதல், மூக்கில் சளி வடிதல், கடுமையான காய்ச்சல், உடல் வீக்கம், உருண்டையான கட்டிகள், நிணநீர் சுரப்பிகள் பெரிதாக காணப்படுதல், கால்கள் வீக்கம் போன்றவை பெரியம்மை பாதிப்பிற்கான அறிகுறிகளாகும். இந்த நோய்க்கு இந்தியாவில் தடுப்பூசி கிடையாது. எனவே, உடலில் ஏற்படும் வீக்கங்களுக்கும், காயங்களுக்கும் சிகிச்சை அளித்தால் மாட்டின் கறவை திறனை தக்க வைக்கலாம்.
இந்நோய்க்கு மூலிகை மருத்துவம் உள்ளது. இதன்படி, தினசரி 30 கிராம் சிறுகுறிஞ்சான் பொடி எடுத்து அதனுடன் வெல்லம் கலந்து கொடுத்து வந்தால் நோய்த்தொற்றின் பாதிப்பை தவிர்க்கலாம்.
மஞ்சள்தூள், கொழுந்து வேப்பிலை, வேப்ப எண்ணெய் இவை மூன்றையும் கலந்து காயங்களில் பூசலாம். ஒரு கொப்பரை தேங்காய், வெல்லம் 100 கிராம், வெந்தயம் 50 கிராம், மஞ்சள் 30 கிராம் ஆகியவற்றைச் சேர்த்து மாடுகளுக்கு தினமும் இரண்டு வேளை கொடுக்கலாம்.
மேலும், பெரியம்மை பாதிக்கப்பட்ட மாடுகளை பண்ணையிலிருந்து தனிமைப் படுத்தி பராமரிக்க வேண்டும். ஈ மற்றும் கொசுக்களுக்கு மருந்து தெளிக்க வேண்டும். புண் மற்றும் கட்டிகள் சுத்தப்படுத்தப்பட்ட துணிகள் மற்றும் பஞ்சுகள், பாதிக்கப்பட்ட கால்நடையின் காய்ந்த திசுகள் ஆகியவற்றினை தீயினால் எரித்துவிட வேண்டும்.
இந்நோய் பாதித்த கால்நடைகளின் இறப்பு சதவீதம் மிகமிக குறைவு. எனவே, பெரியம்மை நோயின் அறிகுறிகள் தென்பட்டால், அருகில் உள்ள கால்நடை மருந்தகங்கள் மற்றும் கால்நடை மருத்துவமனைகளை அணுக வேண்டும், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT