Published : 20 Nov 2020 03:15 AM
Last Updated : 20 Nov 2020 03:15 AM
வள்ளியூர் ரயில்வே சுரங்கப்பாதை பணியில் தொய்வு ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு அமைக்கப்பட்டிருந்த மாற்றுப்பாதை மழையால் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.
வள்ளியூரில் இருந்து திருச்செந்தூர், ராதாபுரம் பகுதிகளுக்கு செல்லும் சாலையில், வள்ளியூர் ரயில் நிலையத் துக்கு அருகே ரயில் தண்டவாளம் குறுக்கிடுகிறது. வாகனப் போக்குவரத்து அதிகரித்துள்ள இந்த சாலையில், ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணி 3 ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது.
பழைய ரயில்வே கிராஸிங் அருகே மாற்றுப்பாதை அமைக்கப்பட்டு இலகுரக வாகனங்கள் மட்டும் அவ்வழியே சென்று வருகின்றன. தற்போது பருவமழை பெய்துவரும் நிலையில் மாற்றுப்பாதை சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. சேறும், சகதியுமாக காணப்படும் இச்சாலையில் வாகனங்கள் சறுக்கிவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வப்போது கார்கள் சகதியில் சிக்கி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அரசு அதிகாரிகளோ, ஆட்சியாளர்களோ இதனைக் கண்டுகொள்ளவே இல்லை என்று வாகன ஓட்டிகள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
வள்ளியூர் வியாபாரிகள் சங்க செயலாளர் எஸ். ராஜ்குமார் கூறியதாவது:
கடந்த 3 ஆண்டுகளாக தொய்வடைந்துள்ள இப்பணியால், நாங்குநேரி, ராதாபுரம், திசையன்விளை தாலுகாவை சேர்ந்தவர்கள், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு செல்லும் பக்தர்கள், வள்ளியூர் வர்த்தகர்கள் சந்திக்கும் துன்பங்கள் ஏராளம். இதுதொடர்பாக, மாவட்ட அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் புகார்கள் தெரிவித்தும் பணிகள் வேகமெடுக்கவில்லை. கடுமையாக சேதமடைந்துள்ள தற்காலிக சாலையையாவது உடனே சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம், என்று தெரிவித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ராதாபுரம் தாலுகா செயலாளர் சேதுராமலிங்கம், தேமுதிக மாவட்ட இணைச் செயலாளர் விஜிவேலாயுதம் ஆகியோர், அனைத்து கட்சி ஆதரவுடன் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT