Published : 17 Nov 2020 03:13 AM
Last Updated : 17 Nov 2020 03:13 AM
கார்த்திகை மாதம் நேற்று பிறந்த நிலையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோயில்களில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து, இருமுடி கட்டி செல்வது வழக்கம். கார்த்திகை மாதத்தின் முதல் நாளில் தொடங்கும் இந்த விரதம், ஒரு மண்டலம்(48 நாட்கள்) நீடித்து மகர ஜோதியைக் காணும் நாளில் நிறைவுபெறும்.
அதுவரை மாலை அணியும் பக்தர்கள் தினமும் காலை, மாலை வேளைகளில் குளித்து, விரதம் மேற்கொண்டு, ஐயப்பனை வழிபடுவர்.
கார்த்திகை மாதம் நேற்று பிறந்த நிலையில், ஈரோட்டில் இருந்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள், அதிகாலையில் நீராடி கோயிலில் துளசி மாலை அணிந்து, தங்களது விரதத்தினை தொடங்கினர்.
ஈரோடு கருங்கல் பாளையத்தில் உள்ள ஐயப்பா சேவா நிறுவன ஐயப்பன் கோயிலில் நேற்று அதிகாலை முதலே ஏராளமான ஐயப்ப பக்தர்கள், கோயில் குருசாமி முன்னிலையில் சரண கோஷத்துடன் மாலை அணிந்து, ஐயப்பனை வழிபட்டு சென்றனர். இதேபோல், பவானி, கோபி, சத்தியமங்கலம், பெருந்துறை, கொடு முடி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT