Published : 16 Nov 2020 03:13 AM
Last Updated : 16 Nov 2020 03:13 AM

திருச்சி மாநகரில் தீபாவளி நாளில் கூடுதலாக குவிந்த 25 டன் குப்பை

திருச்சி

திருச்சி மாநகராட்சியில் கோ-அபிஷேகபுரம், அரியமங்கலம், பொன்மலை, ரங்கம் ஆகிய 4 கோட்டங்கள் உள்ளன. இந்த 4 கோட்டங்களிலும் 2.35 லட்சம் வீடுகள் மற்றும் பல்வகை வணிக நிறுவனங்கள், கடைகள் ஏராளமாக உள்ளன. திருச்சி மாநகரில் சராசரியாக தினமும் 400 டன் முதல் 450 டன் வரை குப்பை வரப்பெறும்.

இந்நிலையில், தீபாவளி பண்டி கைக்கு முந்தைய நாளில் முக்கிய கடைவீதிகளில் தற்காலிக கடைகள் உட்பட பல்வேறு கடைகளில் இருந்து வீசப்பட்ட பாலித்தீன் உறைகள், பாலித்தீன் பைகள், காகிதங்கள் மற்றும் தீபாவளி பண்டிகை நாளில் வீசப்பட்ட பட்டாசு மற்றும் இனிப்பு காலிப் பெட்டிகள், வெடி காகிதங்கள், வாழை இலைகள் என நேற்று மாநகரில் வழக்கத்தைவிட 25 டன் குப்பை கூடுதலாக குவிந்தது.

இதுகுறித்து மாநகராட்சி துப்புரவு அலுவலர்கள் கூறியது:

தீபாவளி பண்டிகை நாளில் கோட்டம்தோறும் வழக்கத்தைக் காட்டிலும் கூடுதலாக 5 டன் குப்பை வரப் பெறும். அதன்படி, கோ-அபிஷேகபுரம், பொன்மலை, அரியமங்கலம் ஆகிய 3 கோட்டங் களில் வழக்கத்தைக் காட்டிலும் கூடுதலாக தலா 5 டன் குப்பை குவிந்துள்ளது. ஆனால் பெரிய கடைவீதி, பர்மா பஜார், என்எஸ்பி சாலை, மேலரண் சாலை உள்ளிட்ட கடைவீதிகளைக் கொண்ட ரங்கம் கோட்டத்தில் இருந்து வழக்கத்தைக் காட்டிலும் கூடுதலாக 10 டன் குப்பை வரப் பெற்றது என்றனர். தீபாவளிக்கு மறுநாளான நேற்று மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் கடைவீதிகளில் வீசப்பட்டிருந்த குப்பையை ஆங்காங்கே குவித்து வைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, மாநகராட்சி குப்பை வாகனத்தில் குப்பை ஏற்றப்பட்டு, அப்புறப்படுத்தப்படும் என்றனர்.

புதுக்கோட்டையில்...

இதேபோல, தீபாவளி பண்டிகையையொட்டி புதுக்கோட்டையில் உள்ள கடைவீதிகளிலும், 42 வார்டுகளிலும் உள்ள குடியிருப்பு பகுதிகளிலும் ஏராளமான குப்பை தேங்கியது. இந்த குப்பை மழையில் நனைந்து அழுகியதால், துர்நாற்றம் வீசத் தொடங்கியது. இதையடுத்து, 300 தூய்மைப் பணியாளர்கள் மூலம் 40 டன் அளவிலான குப்பை நேற்று அகற்றப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x