Published : 13 Nov 2020 03:17 AM
Last Updated : 13 Nov 2020 03:17 AM

நெல்லை - மதுரை வழித்தடத்தில் கடம்பூர் - கங்கைகொண்டான் இடையே அதிவேக ரயில் சோதனை ஓட்டம் தென்மண்டல முதன்மை பாதுகாப்பு ஆணையர் ஆய்வு

கடம்பூர்- கங்கைகொண்டான் ரயில் நிலையங்களுக்கு இடையேயான புதிய இரட்டை வழித்தடத்தில் நேற்று நடைபெற்ற சோதனை ஓட்டத்தில் கங்கைகொண்டான் ரயில் நிலையத்தை கடந்து செல்லும் அதிவேக ரயில். (அடுத்தபடம்) மூன்று நடைமேடைகளுடன் தரம் உயர்த்தப்பட்ட கங்கைகொண்டான் ரயில் நிலையத்தில், தென்மண்டல முதன்மை பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் தலைமையிலான அதிகாரிகள் குழு ஆய்வு மேற்கொண்டது. படங்கள்: மு.லெட்சுமி அருண்.

திருநெல்வேலி

திருநெல்வேலி - மதுரை வழித்தடத்தில், கடம்பூர்- கங்கைகொண்டான் ரயில் நிலையங்களுக்கு இடையே அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்று. தென்மண்டல முதன்மை பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் தலைமையிலான அதிகாரிகள் குழு, இதனை ஆய்வு மேற்கொண்டது.

கடம்பூர் - கங்கைகொண்டான் ரயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை ரயில் பாதை வேலைகள் முடிவடைந்து, கடந்த மார்ச் மாதம்தென்மண்டல முதன்மை பாதுகாப்பு ஆணையர் ஆய்வு நடத்தியிருந்தார். இந்த புதிய ரயில் பாதையில் 60 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்களை இயக்க அப்போது அனுமதி அளித்திருந்தார்.

இப்பாதையில் ரயில்களின் வேகத்தை மணிக்கு 100 கிலோ மீட்டராக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, கடம்பூர் - கங்கைகொண்டான் பிரிவு இரட்டை ரயில் பாதையில் அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது. இதனை, தென்மண்டல முதன்மை பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் ஆய்வு செய்தார். பின்னர், தரம் உயர்த்தப்பட்ட கங்கைகொண்டான் ரயில் நிலையத்திலும் ஆய்வு மேற்கொண்டார்.

2021 டிசம்பரில் நிறைவுறும்

திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம், மதுரை கோட்ட ரயில்வேமேலாளர் வி.ஆர்.லெனின், கூறியதாவது: மதுரை - திருநெல்வேலி இரட்டை ரயில் பாதை பணிகள் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் முடிவடையும். கடம்பூர் - கங்கைகொண்டான் இடையே ரயிலின் வேகத்தை அதிகரிப்பது குறித்து ஆய்வு நடைபெற்றுள்ளது. அடுத்த 10 நாட்களில் அவ்வழியாக செல்லும் ரயில்களின் வேகம் 100 கிலோ மீட்டராக அதிகரிக்கப்படும். திருநெல்வேலி - திருச்செந்தூர் ரயில் பாதையை மின் மயமாக்கும் பணி விரைவில் தொடங்கும் என்று தெரிவித்தார். ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் முதன்மை திட்ட மேலாளர் கமலாகர் ரெட்டி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

ரயில்களில் கூடுதல் பெட்டிகள்

தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னையிலிருந்து செங்கோட்டை, கொல்லம், நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய நகரங்களுக்கு செல்லும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, நேற்று முதல் வண்டி எண் 06181 சென்னை எழும்பூர் - செங்கோட்டை வாரம் மும்முறை சேவை சிறப்பு ரயிலில் 4 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகளும், வண்டி எண் 06723 சென்னை எழும்பூர் - கொல்லம் சிறப்பு ரயில், வண்டி எண் 02631 சென்னை எழும்பூர் - திருநெல்வேலி சிறப்பு ரயில், 02661 சென்னை எழும்பூர் - செங்கோட்டை சிறப்பு ரயில் ஆகியவற்றில் தலா ஓர் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டியும், வண்டி எண் 06063 சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வாரம் இருமுறை சிறப்பு ரயிலில் 6 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளன.

மேலும் வண்டி எண் 02633/02634 சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் மற்றும் வண்டி எண் 02693/02694 சென்னை எழும்பூர் - தூத்துக்குடி - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் ஆகியவற்றில் தலா ஓர் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x