Published : 12 Nov 2020 03:14 AM
Last Updated : 12 Nov 2020 03:14 AM
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே பல நாட்களாக மின் விநியோகம் இல்லாததைக் கண்டித்து கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்
காளையார்கோவில் அருகே மறவமங்கலம் துணை மின்நிலை யத்தில் இருந்து மறவமங்கலம், ஏரிவயல், சூராணம், புல்லுக் கோட்டை, வலையம்பட்டி, குண்டாக்குடை, சிலுக்கப்பட்டி, பெரியகண்ணனூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்விநியோகம் செய்யப்படுகிறது.
மறவமங்கலம் துணை மின் நிலையத்தில் ஒரு மின்மாற்றி மட்டுமே உள்ளதால் அனைத்து பகுதிகளுக்கும் சீரான மின்சாரம் அளிக்க முடியவில்லை. இதனால் அடிக்கடி மின்தடை ஏற்படுவதோடு, குறைந்த அழுத்த மின்சாரமே விநி யோகிக்கப்படுகிறது.
இந்நிலையில் பெரியகண்ண னூர் பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகளில் மின் உபயோகப் பொருட்களை பயன்படுத்த முடியவில்லை. பம்புசெட் மோட்டார்களை இயக்க முடியாமல் பயிர்கள் காய்ந்து வருகின்றன. தெருவிளக்குகள் எரியாததால் இரவு நேரங்களில் நடமாட முடியவில்லை.
இதுகுறித்து மறமங்கலம் துணை மின்நிலையத்தில் கிராம மக்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதையடுத்து காளையார் கோவில் துணை மின்நிலையம் முன் மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் பெரிய கண்ணனூர் கிராம மக்கள் மறி யலில் ஈடுபட்டனர்.
தங்களது பகுதியை மறவமங்கலம் துணை மின்நிலையத்தில் இருந்து பிரித்து காளையார்கோவில் துணை மின்நிலையத்துடன் இணைக்க வேண்டும் என கோஷமிட்டனர். அவர்களை மின்வாரிய அதிகாரிகள், போலீஸார் சமரசப்படுத் தியதை அடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT