Published : 12 Nov 2020 03:14 AM
Last Updated : 12 Nov 2020 03:14 AM
பிஹாரில் அதிகார பலம் மற்றும் பண பலத்தைக்கொண்டுதான் பாஜக கூட்டணி ஆட்சியை தக்க வைத்துள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நவ.26-ல் தொழிற்சங்கங்கள் நடத்தும் நாடுதழுவிய பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் வேளாண் சட்டங்களை திருப்பப்பெற வலியுறுத்தும் கோரிக்கையோடு விவசாய அமைப்புகளும் பங்கேற்க இருக்கின்றன.
பிஹாரில் அதிகார பலம், பண பலத்தை பயன்படுத்தியே பாஜக கூட்டணி ஆட்சியை தக்க வைத்துள்ளது. மேலும், உள்ளடி வேலை செய்து ஐக்கிய ஜனதா தளத்தை பாஜக பலவீனமடையச் செய்துள்ளது. பொதுவாக ஆன்மிக யாத்திரையை யாரும் எதிர்ப்பதில்லை. ஆனால், பாஜக நடத்தும் வேல் யாத்திரையானது முழுக்க முழுக்க அரசியல் ரீதியிலான யாத்திரை. நீதிமன்றமும் இதை சுட்டிக்காட்டியுள்ளது. தமிழக அரசு, இந்த யாத்திரைக்கு அனுமதி மறுப்பதுபோன்று நடந்துகொண்டு, யாத்திரையை அனுமதித்தும் வருகிறது.
தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலையும், நிர்ணயிக்கப்பட்ட கூலியும் வழங்கப்படுவதில்லை. இந்த குறைபாடுகளை களைவதுடன், ரெங்கராஜன் குழு பரிந்துரைப்படி பேரூராட்சிப் பகுதிகளுக்கும் இத்திட் டத்தை அமல்படுத்த வேண்டும்.
காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டத்தில் கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு போதுமான இழப்பீட்டை விவசாயிகளுக்கு அரசு வழங்க வேண்டும்.
உள்ளூர் பகுதி கட்டுமானப் பணிகளுக்காகவும், மாட்டு வண்டித் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும் புதுக்கோட்டை மாவட்டத்தில் மாட்டுவண்டிக்கு என தனியாக மணல் குவாரி அமைக்க வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT