Published : 11 Nov 2020 03:18 AM
Last Updated : 11 Nov 2020 03:18 AM
தேசிய பசுமை தீர்ப்பாய தென்மண்டல கண்காணிப்பு குழுத் தலைவர் நீதிபதி பி.ஜோதிமணி திருநெல்வேலி மாநகராட்சியில் நடைபெறும் பல்வேறு பணிகளை ஆய்வு செய்தார்.
திருநெல்வேலி ராமையன்பட்டி குப்பை சேகரிப்பு மைய வளாகத்தில் உள்ள நுண்ணுயிர் உரமாக்குதல் மையத்தில் குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் உரக்கிடங்கு மற்றும் அவ்வளாகத்தில் குறுங்காடுகள் அமைக்கும் திட்டத்தில் வளர்க்கப்படும் மரக்கன்றுகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய செயல்பாடு உள்ளிட்டவற்றை நீதிபதி ஜோதிமணி ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல கண்காணிப்பு குழுவானது 7 மாநிலங்களை உள்ளடக்கியது. திடக்கழிவு மேலாண்மை குறித்தும் நுண்ணுயிர் உரமாக்குதல் மையம், காய்கறி கழிவுகளைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கும் மையம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்தும் ஒவ்வொரு மாநிலமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி மாநகராட்சிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாநகராட்சியில் செயல்படும் ராமையன்பட்டி குப்பை சேகரிப்பு மைய வளாகத்தில் நுண்ணுயிர் உரமாக்குதல் , குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் உரக்கிடங்கின் செயல்பாடுகள் மற்றும் குறுங்காடுகள் அமைக்கும் திட்டம் போன்றவை பாராட்டும் வகையில் அமைந்துள்ளன. மேலும், திருநெல்வேலி மாநகராட்சியில் 40 திடக்கழிவு நுண்உரமாக்கும் மையம் செயல்பட்டு வருகிறது. திடக்கழிவு மேலாண்மை திட்டம் வெற்றி பெறுவதற்கு பொதுமக்களின் பங்களிப்பு மிகவும் அவசியம் என்று தெரிவித்தார்.
ஆய்வுக் கூட்டம்
இதைத் தொடர்ந்து சிந்துபூந்துறை மற்றும் கொக்கிரகுளம் மாரியம்மன்கோயில் தாமிரபரணி ஆற்றுப்படுகையில் கழிவுநீர் சுத்திகரிப்பு கட்டமைப்பு பணி மற்றும் சங்கர்காலனி, மனகாவலம்பிள்ளை நகரில் உள்ள நுண்ணுரம் செயலாக்க மையம் ஆகியவற்றை நீதிபதி ஜோதிமணி பார்வையிட்டார்.பின்னர் திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், மாநகராட்சி ஆணையர் கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT