Published : 10 Nov 2020 03:12 AM
Last Updated : 10 Nov 2020 03:12 AM
விளைநிலங்களின் வழியே பெட்ரோலிய குழாய் பதிக்கும் ஐடிபிஎல் திட்டத்தை, சாலை யோரமாக கொண்டு செல்லும் வகையில் மாற்றியமைக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை அரசியல் கட்சிகள் வாக்குறுதியாக அளிக்க வேண்டும், என விவசாயிகள் கோரிக்கை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோவை மாவட்டம் இருகூரில் இருந்து திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட ஆறு மாவட்டங்களின் வழியாக பெட்ரோலியம் எடுத்துச் செல்ல குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் இத்திட்டத்தின்படி, தங்கள் விளைநிலங்களில் குழாய் களை பதிக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கூட்டுக்குழு அமைத்து போராடி வருகின்றனர்.
இப்பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி, ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் நேற்று கோரிக்கை மாநாடு நடந்தது. ஈரோடு மாவட்ட விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் காசியண்ணன் தலைமை வகித்தார். திமுக துணைப்பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், எம்.பி.க்கள் கணேசமூர்த்தி (ஈரோடு), சுப்பராயன் (திருப்பூர்), பார்த்திபன் (சேலம்), எம்.எல். ஏ. தனியரசு, கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர்கள் முனுசாமி, பொன்னையன் உள்ளிட்டோர் மாநாட்டில் பங்கேற்றனர்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:
விளைநிலங்களின் வழியே கெயில் நிறுவனம் குழாய்களை பதிக்கும் திட்டத்தைக் கொண்டு வந்தபோது, முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு விவசாயிகளின் கருத்துக்களை கேட்டறிந்து, அதன் அடிப்படையில், விளைநிலங்களில் குழாய் பதிப்பதற்கு அரசு தடைவிதித்தது. இதனைப் பின்பற்றி ஐடிபிஎல் திட்டத்தை சாலையோரமாகக் கொண்டு செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக வெளியிட வேண்டும்.
விவசாயிகளின் எதிர்ப்பை மீறி ஐடிபிஎல் திட்டத்திற்காக தருமபுரி மாவட்டத்தில் நல்லம்பள்ளி, பாலக்கோடு ஆகிய வட்டங்களில் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது கண்டனத்துக் குரியது.
இதனைத் திரும்பப் பெற வலியுறுத்து வரும் 30-ம் தேதி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டம் நடைபெறும் என்பதுள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் நடந்த ஐடிபிஎல் திட்டத்தை மாற்றியமைக்கக் கோரிக்கை விடுக்கும் மாநாட்டில் திமுக துணைப் பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT