Published : 10 Nov 2020 03:12 AM
Last Updated : 10 Nov 2020 03:12 AM

தீபாவளிக்கு 3 நாட்களே உள்ள நிலையில் நெல்லை கடைவீதிகளில் மக்கள் கூட்டம்

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், புத்தாடைகள் உள்ளிட்ட பொருட்கள் வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். திருநெல்வேலி டவுன் வடக்கு ரதவீதியில் மாலை நேரத்தில் காணப்பட்ட மக்கள் கூட்டம். படம்: மு.லெட்சுமி அருண்

திருநெல்வேலி

திருநெல்வேலியில் தீபாவளியை முன்னிட்டு கடைவீதிகளில் கூட்டம் அலைமோதுகிறது. காவல்துறை சார்பில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்படுகிறது.

கரோனா ஊரடங்கு தளர்வு காரணமாக தீபாவளிக்கு புத்தாடைகள், உணவுப் பண்டங்கள், சமையலுக்கு தேவையான பொருட்களை வாங்க கடைவீதிகளுக்கு மக்கள் அதிகளவில் வருகின்றனர். திருநெல்வேலி டவுன் வடக்கு ரதவீதி, வண்ணார்பேட்டை, தெற்குமற்றும் வடக்கு புறவழிச்சாலை, திருநெல்வேலி சந்திப்பு, பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் கூட்டம் அதிகம் காணப்படுகிறது.

இதனால் டவுன் ரதவீதிகளில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. டவுன் வடக்கு ரதவீதியில் தினமும் மாலை வேளைகளில் கூட்டம் அதிகம் கூடுவதால்,அவ்வழியாக வாகன போக்குவரத்து தடைபட்டுள்ளது.

புகார் அளிக்க வசதி

கடை வீதிகளுக்கு வரும் மக்கள்தங்கள் உடைமைகளை பாதுகாப்பாக வைத்திருக்க விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை போலீஸார் விநியோகித்து வருகின்றனர். சந்தேகப்படும் நபர்கள் குறித்தும், புகார்கள் தொடர்பாகவும் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு 100 என்ற எண்ணிலும், திருநெல்வேலி சந்திப்பு குற்றப்பிரிவு காவல் நிலையத்துக்கு 0462-2329043 என்ற எண்ணிலும், பாளையங்கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்துக்கு 0462-2568028 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x