Published : 06 Nov 2020 03:17 AM
Last Updated : 06 Nov 2020 03:17 AM
நாமக்கல்லில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு சார்பில் நாமக்கல் மாவட்ட அனைத்து சங்க தலைவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. திமுக பொருளாளரும், தேர்தல் அறிக்கை குழுவின் ஒருங்கிணைப்பாளருமான டி.ஆர்.பாலு எம்பி தலைமை வகித்தார். கூட்டத்தில் கட்சியின் அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்பி பேசினார்.
கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு சங்கத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் தங்களின் நீண்ட நாளைய கோரிக்கைகளை திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவிடம் தெரிவித்தனர். மேலும், கோரிக்கைகள் மீதான சந்தேகங்களுக்கும் சங்க நிர்வாகிகள் விளக்கம் அளித்தனர்.
திமுக துணைப் பொதுச்செயலாளர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், எம்பிக்கள் செல்வராஜ், திருச்சி சிவா, நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.ஆர்.என். ராஜேஷ்குமார், மேற்கு மாவட்ட செயலாளர் கே.எஸ்.மூர்த்தி எம்எல்ஏ, முன்னாள் மாவட்டச் செயலாளர் செ.காந்திசெல்வன், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் பார்.இளங்கோவன், நாமக்கல் எம்பி சின்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பாஜகவிற்கு கட்டுப்பட்டு ஆட்சி நடத்துபவர்கள் வேல் யாத்திரைக்கு தடை விதித்துள்ளனர். இந்த தடை நீடிக்குமா எனத் தெரியாது. எந்த அடிப்படையில் அதை செய்தார்கள் எனத் தெரியவில்லை. இதற்கு வேறு காரணம் உள்ளதா என ஆராய வேண்டும்.
கரோனா தொற்று பரவத் தொடங்கிய காலத்தில் இருந்து தமிழக அரசு மெத்தன போக்கோடு செயல்படுகிறது. அதே நிலை தான் பள்ளிகள் திறப்பு விஷயத்திலும் நடந்துள்ளது, என்றார்.
சேலத்தில் கூட்டம்
சேலத்தில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கூட்டம் நடந்தது.கூட்டத்தில், திமுக நிர்வாகிகள் டி.ஆர்.பாலு, சுப்புலட்சுமி ஜெகதீசன், திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன், அந்தியூர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திமுக மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.
தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவினரிடம் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த திமுக-வினர், பொதுமக்கள், வணிகர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்டோர் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வழங்கினர்.
குறிப்பாக, சேலம் இரும்பாலையை தனியார் மயமாக்கக் கூடாது, ஜிஎஸ்டி., வரி வசூலிப்பை முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மனுக்களாக வழங்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT