Published : 05 Nov 2020 03:13 AM
Last Updated : 05 Nov 2020 03:13 AM
திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.2.41 கோடி மதிப்பிலான புதிய நீதிமன்ற கட்டிடங்களை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அம்ரேஷ்வர் பிரதாப் சாஹி காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
தி.மலை மாவட்ட ஒருங் கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ‘பாதிப்புக்குள்ளாகக் கூடிய மற்றும் குழந்தை சாட்சிகள் விசாரணை மையம்’ கட்டிடம், செங்கத்தில் புதிய சார்பு நீதிமன்றம் மற்றும் தண்டராம்பட்டில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உள்ளிட்ட கட்டிடங்கள் ரூ.2.41 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளன. புதிய கட்டிடங்கள் திறப்பு விழா காணொலி காட்சி மூலம் நேற்று நடைபெற்றது.
புதிய கட்டிடங்களை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அம்ரேஷ்வர் பிரதாப் சாஹி காணொலி வாயிலாக திறந்து வைத்தார். இதில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், கிருஷ்ணகுமார், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். முன்னதாக முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி திருமகள் வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், திருவண்ணாமலை பார் சங்க தலைவர் ராமகிருஷ்ணன், தி.மலை வழக்கறிஞர்கள் சங்க தலைவர் மனோகரன், செங்கம் பார் சங்க தலைவர் தினகரன், செங்கம் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் விஜயராகவன் உள்ளிட் டோர் வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பேசும்பாது, ‘‘தமிழகத்திலேயே முதல் முறையாக திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றவளாகத்தில் பாதிப்புக்குள்ளாகக் கூடிய மற்றும் குழந்தை சாட்சியங்கள் விசாரணை மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. குற்றவியல் வழக்குகளில் விசாரணையின்போது பார்வை, முகபாவம் அல்லது வேறு விதங் களில் மிரட்டும் குற்றவாளிகளை நேரில் பார்க்காமல் தனி அறையில் வைத்து மற்றவர்கள் பார்க்கும்படி காணொலி வாயிலாக விசாரணை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சாட்சியங்களை வேறு தனி வழியாகவும், குற்றவாளிகளை தனி வழியாகவும் அழைத்து வருவதற்கும் ஏற்ற வகையில் இந்த மையம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தி.மலை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 3 ஆயிரம் வழக்குகளில் செங்கம் வட்டத்துக்கு உட்பட்ட 1,200 நிலுவை வழக்குகள் இனி செங்கம் சார்பு நீதிமன்றம் மூலமாக விசாரிக்கப்படும்.
தண்டராம்பட்டு நீதிமன்றத்தின் மூலமாக தானிப்பாடி, சாத்தனூர், வாணாபுரம், தண்டராம்பட்டு காவல் நிலைய வழக்குகளின் விசாரணை செய்யப்படும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT