Published : 04 Nov 2020 03:13 AM
Last Updated : 04 Nov 2020 03:13 AM
கரோனா ஊரடங்கு காரணமாக, கடந்த மார்ச் கடைசி வாரம் முதல் பேருந்து, ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. இயங்காமல் இருந்த நகர பேருந்துகள் ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு செப்டம்பர் 1-ம் தேதிதான் இயங்கத் தொடங்கின. இதனால், வேறு வழியில்லாததால் அன்றாடம் அலுவலக வேலைக்குச் செல்வோர் பழைய இருசக்கர வாகனங்களை வாங்கி பயன்படுத்தத் தொடங்கினர். இதுதவிர, கடந்த ஆண்டைவிட நடப்பாண்டு ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் புதிய வாகன பதிவும் அதிகரித்துள்ளது.
கோவை மண்டலத்தில் கோவை, திருப்பூர், மேட்டுப்பாளையம், தாராபுரம், உதகை உள்ளிட்ட இடங்களில் உள்ள 16 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மொத்தம் 12,573 இருசக்கர வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நடப்பாண்டு இந்த எண்ணிக்கை 14,123-ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, கடந்த ஆண்டு செப்டம்பரில் மொத்தம் 2,131 கார்கள் பதிவு செய்யப்பட்டன. நடப்பாண்டு இந்த எண்ணிக்கை 2,400-ஆக அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக கோவை மாவட்ட கார் வியாபாரிகள் நலச் சங்கத்தின் (சிசிடிஏ) பொதுச் செயலாளர் என்.கண்ணன் கூறும்போது, “மே மாதத்தில் இருந்து பழைய இருசக்கர வாகனங்கள், கார் விற்பனை எதிர்பாராத அளவு அதிகரித்துள்ளது. பொதுப் போக்குவரத்து முடக்கப்பட்டதும், பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தினால் தொற்று ஏற்படுமோ என்ற அச்சமும் இதற்கு முக்கிய காரணம். நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் எப்படியாவது பணத்தைப் புரட்டி பழைய வாகனங்களை வாங்கிச் செல்கின்றனர்.
இதில், பலரும் கடன் வாங்காமல் முழு தொகையையும் செலுத்தி வாகனங்களை வாங்கிச் சென்றனர். 30 ஆண்டுகளாக நான் இந்தத் தொழிலில் இருக்கிறேன். எனக்கு இது புதிய அனுபவம். இருப்பில் இருந்த கார்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துள்ளன. வழக்கமாக கோவை மாவட்டம் முழுவதும் மாதத்துக்கு அதிகபட்சம் 100 பழைய கார்கள் விற்பனையாவது பெரிய விஷயம். ஆனால், கடந்த சில மாதங்களில் இந்த எண்ணிக்கை குறைந்தபட்சம் 150-ஐ தாண்டியது. கோவை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் பழைய கார்கள் அதிக அளவில் விற்பனையாகியுள்ளன” என்றார்.
குறைந்த விலைக்கு முன்னுரிமை
ஆர்.எஸ்.புரத்தில் பழைய இருசக்கர வாகன விற்பனை நிறுவனத்தை நடத்திவரும் இலியாஸ் கூறும்போது, “புதிய இருசக்கர வாகனங்கள் விற்பனை கணிசமாக அதிகரித்தாலும், அதைவிட பழைய வாகனங்களை மக்கள் அதிகம் நாடினர். 100 சிசி திறன் கொண்ட, குறைந்த விலையுள்ள இருசக்கர வாகனங்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன. பெரும்பாலான கடைகளில் இருப்பு இல்லை. இதில், பெண்கள் அதிகம் பயன்படுத்தும் ஸ்கூட்டர் வகை வாகனங்கள் அதிக அளவு விற்பனையாகின. மாதத்துக்கு சராசரியாக கடைக்கு 75 வாகனங்கள் வரை விற்றுள்ளன” என்றார்.பொதுப் போக்குவரத்தை குறைத்துக்கொண்டு, சொந்த வாகனங்களை வாங்கி மக்கள் பயணிக்கத் தொடங்கியுள்ளது குறித்து கோவை மாவட்ட பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் வி.துரைக்கண்ணன் கூறும்போது, “கரோனாவுக்கு முன்புவரை நகர பேருந்துகளில் தினமும் 1,800 முதல் 2 ஆயிரம் பேர் பயணித்துவந்தனர். அந்த எண்ணிக்கை தற்போது ஆயிரத்துக்கும் கீழ் சரிந்துள்ளது. தீபாவளிப் பண்டிகை நெருங்குவதால் வார இறுதி நாட்களில் மட்டும் கூட்டம் உள்ளது. பலரும் சொந்த வாகனங்களைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். இரவு 7 மணிக்கு மேல் பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரித்தால் 10 சதவீத பயணிகள் மீண்டும் பொதுப் போக்குவரத்துக்கு திரும்ப வாய்ப்புள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT