Published : 03 Nov 2020 03:12 AM
Last Updated : 03 Nov 2020 03:12 AM
கோவை: இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
பாரத தரிசன சுற்றுலா ரயிலானது நவம்பர் 11-ம் தேதி ‘தீபாவளி கங்கா ஸ்நான யாத்திரை’ ரயில் என்ற பெயரில் திருநெல்வேலியில் இருந்து புறப்படுகிறது. இந்த ரயில் மதுரை, திருச்சி, விழுப்புரம், சென்னை எழும்பூர் வழியாக முதலில் கயா செல்கிறது. பக்தர்கள் இங்குள்ள பல்குனி நதியில் நீராடி, விஷ்ணுபாத கோயிலில் முன்னோருக்கு பிண்ட பிரதானம் செய்யலாம். தீபாவளித் திருநாள் அன்று வாரணாசியில் கங்கையில் புனித நீராடி காசி விஸ்வநாதர் விசாலாட்சி மற்றும் அன்னபூரணியை தரிசனம் செய்யலாம்.
பிறகு அலகாபாத் வந்தடைந்து கங்கை, யமுனை, சரஸ்வதி என மூன்று நதிகள் கூடும் திரிவேணி சங்கமத்தில் நீராடலாம். 8 நாட்கள் கொண்ட இந்த சுற்றுப்பயணத்துக்கு ரூ.7,575 கட்டணமாகும். இதில் ரயில் பயண கட்டணம், தென்னிந்திய சைவ உணவு, தங்கும் வசதி, சுற்றிப்பார்க்க வாகன வசதி ஆகியவை அடங்கும். மேலும் உடைமைகளை ரயிலிலேயே வைத்துவிட்டு தேவையானவற்றை மட்டும் எடுத்துச் செல்லும் வசதியும் உள்ளது. ஒவ்வொரு பெட்டிக்கும் தகுதி வாய்ந்த மேலாளர்கள், பாதுகாவலர்கள், உணவு பரிமாறுபவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முன்பதிவுக்கு கோவை ஐஆர்சிடிசி அலுவலகத்தை 9003140655, 8287931965 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT