Published : 03 Nov 2020 03:12 AM
Last Updated : 03 Nov 2020 03:12 AM

கடைகள் அமைக்கும் பணிகள் தீவிரம் கரோனாவால் தீவுத்திடல் பட்டாசு கடைகள் எண்ணிக்கை 40 ஆக குறைந்தது வரும் 6-ம் தேதி முதல் விற்பனை தொடக்கம்

சென்னை

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அரசு விதித்த நிபந்தனைகளால் சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் எண்ணிக்கை60-ல் இருந்து 40 ஆக குறைந்துள்ளது. கடைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வரும் 6-ம் தேதி முதல் பட்டாசு விற்பனை தொடங்கும்.

தீபாவளியையொட்டி சென்னை தீவுத்திடல், ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானம், நந்தம்பாக்கம் வர்த்தக மையம் (அருகில்) ஆகியஇடங்களில் அதிக எண்ணிக்கையிலான பட்டாசு கடைகள் அமைக்கப்படுவது வழக்கம். சென்னை தீவுத்திடலில் அதிகபட்சமாக 60 பட்டாசு கடைகள் வரை அமைக்கப்படும். இந்த ஆண்டு கரோனா வைரஸ் பரவல் காரணமாக அரசுபல்வேறு நிபந்தனைகளுடன் தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்க அனுமதி அளித்துள்ளது. இதனால் பட்டாசு கடைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

இதுகுறித்து சென்னைப் பெருநகர பட்டாசு விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் என்.பி.எம்.ஷேக் அப்துல்லா கூறியதாவது:

சென்னை தீவுத்திடலில் கடந்த ஆண்டு 60 பட்டாசு கடைகள் வைத்திருந்தோம். இந்த ஆண்டு அரசு பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. குறிப்பாக பட்டாசு கடைகளுக்கு இடையேயான தூரம் 9 அடியில் இருந்து 15 அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடைகளுக்குள் அதிகபட்சம் 5 பேருக்கு மேல் அனுமதிக்கக் கூடாது. மற்ற வாடிக்கையாளர்கள் காத்திருந்து பட்டாசுகள் வாங்கிச் செல்ல வசதியாக கடைக்கு வெளியில் அமர்வதற்கு வசதி செய்து தர வேண்டும். வாடிக்கையாளர்கள் தங்கள் கைகளை சுத்தம் செய்யசானிடைசர் வைக்க வேண்டும். முகக் கவசம் அணிந்து வருவோருக்கு மட்டுமே பட்டாசுகளை விற்க வேண்டும். தனிமனித இடைவெளியை உறுதி செய்ய வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

கரோனாவால் பட்டாசு விற்பனையாகாமல் போய்விடலாம் என்ற அச்சத்தில் சிவகாசியில் பட்டாசு உற்பத்தி கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு குறைவாக உள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு பட்டாசு உற்பத்தி 30 சதவீதம் குறைவுதான். ஆனால், விலையில்எந்த மாற்றமும் இல்லை. சென்னைக்கு கடந்த ஆண்டு ரூ.10 கோடிமதிப்புள்ள பட்டாசுகள் வரவழைக்கப்பட்டன. இந்த ஆண்டு ரூ.5 கோடி மதிப்புள்ள பட்டாசுகள்தான் வரவழைக்கப்படுகின்றன. வரும் 6-ம் தேதி காலை, பட்டாசுகள் விற்பனை தொடங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கடைகளுக்குள் 5 பேருக்கு மேல் அனுமதிக்கக் கூடாது. மற்ற வாடிக்கையாளர்கள் கடைக்கு வெளியில் அமர்வதற்கு வசதி செய்து தர வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x