Published : 03 Nov 2020 03:12 AM
Last Updated : 03 Nov 2020 03:12 AM
வீடுகளில் வாடகைக்கு குடியிருப்பவர்களின் விவரங்களை சேகரித்து, அருகில் உள்ள காவல்நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று வீட்டு உரிமையாளர்களுக்கு சென்னை காவல் துறைசார்பில் அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, வீட்டு உரிமையாளர்கள் தங்கள் வீடுகளை வாடகைக்கு விடுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இது தொடர்பாக சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னையில் பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் வாடகைதாரர்கள் என்ற பெயரில் சமூக விரோதிகள் குடியிருப்பதாகவும் அவர்களால் பொது ஒழுங்கு மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படலாம் என்றும் தெரிய வருகிறது.மேலும், தீவிரவாதிகள் மற்றும் சமூக விரோதிகள் புகலிடம் தேடி குடியேற வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே, சென்னை மாநகர குடியிருப்பு பகுதிகளில் உள்ள வாடகைதாரர்கள் குறித்த விவரங்களை சேகரிக்க வேண்டிய அவசியம் காவல்துறைக்கு ஏற்பட்டு உள்ளது. 1973-ம் ஆண்டு குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 144-ன்கீழ், மாவட்ட கூடுதல் நீதிபதி என்ற பொறுப்பின் அடிப்படையில் காவல் ஆணையரால் பின்வரும் ஆணை பிறப்பிக்கப்படுகிறது.
சென்னை மாநகரில் குடியிருப்பு உரிமையாளர்கள், நிலச்சொந்தக்காரர்கள் ஆகியோர் தங்களுக்கு சொந்தமான குடியிருப்புகளில் வாடகைக்கு குடியிருப்பவர்கள் குறித்த விவரம் மற்றும் வேறுநபர் தங்குவதற்கு அனுமதி வழங்கியிருந்தால் அதன் விவரத்தை வாடகைதாரர் புகைப்படத்துடன் சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிக்கு உரிய படிவத்தில் (இதற்கென தனி படிவம் அச்சிடப்பட்டு உள்ளது) தெரிவிக்க வேண்டும்.
மேற்கண்ட ஆணைக்கு எதிராக செயல்படுபவர்கள் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 188-ன்கீழ் தண்டனைக்கு உள்ளாவார்கள். இந்த ஆணையானது ஒவ்வொரு தனி நபருக்கும் தனித்தனியே வழங்க இயலாது என்பதால் ஊடகங்கள் வாயிலாகவும், அனைத்து மாவட்ட காவல் துறை துணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்களின் அலுவலகங்கள், அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள அறிவிப்பு பலகைகள் மூலமாகவும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது
இந்த ஆணை, நவம்பர் 1-ம்தேதி முதல் அமலுக்கு வருகிறது. டிசம்பர் 31-ம் தேதிக்குள் வாடகைதாரர்கள் விவரங்களை சேகரித்து அருகே உள்ள காவல்நிலையங்களில் வீட்டு உரிமையாளர்கள் கொடுக்க வேண்டும். பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் பொது அமைதியை பேணிப்பாதுகாக்கும் பொருட்டு பிறப்பிக்கப்பட்டு உள்ள இந்த ஆணைக்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்கவேண்டும். இவ்வாறு அந்த அறிவிப்பாணையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT