Published : 03 Nov 2020 03:12 AM
Last Updated : 03 Nov 2020 03:12 AM

பாலாற்று வெள்ளத்தால் தரைப்பாலம் உடைந்து 5 ஆண்டாகியும் இரும்புலிச்சேரியில் மேம்பாலம் கட்டவில்லை மழைக்காலங்களில் கிராம மக்களின் போக்குவரத்து பாதிப்பு

நெரும்பூர்-இரும்புலிச்சேரி இடையே பாலாற்றின் வெள்ளத்தால் சேதமடைந்த தரைப்பாலம்.

திருக்கழுக்குன்றம்

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டத்துக்கு உட்பட்ட நெரும்பூர் கிராமத்தில் இருந்து இரும்புலிச்சேரி, எடையாத்தூர் ஆகிய கிராமங்களுக்கு செல்லும் வகையில், பாலாற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைந்திருந்தது. இதன்மூலம், மேற்கண்ட கிராம மக்கள் நகரப்பகுதிக்கு சென்று திரும்பினர்.

இந்நிலையில், கடந்த 2015-ம்ஆண்டு பெய்த பெருமழையால் பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால், மேற்கண்ட கிராம மக்கள் தீவு போல் தனித்து விடப்பட்டனர். வெள்ளம் குறைந்ததும் மாவட்ட நிர்வாகம் ஆற்றின் குறுக்கே தற்காலிமாக தரைப்பாலம் அமைத்தது. இந்ததரைப்பாலமும், அடுத்த மழைவெள்ளத்திலேயே சேதமடைந்ததால், மக்கள் பாலாற்றில் வெள்ளம் ஏற்படும்போதெல்லாம் நகருக்கு வந்து செல்ல முடியாமல் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இரும்புலிச்சேரி-நெரும்பூர் இடையே உயர்மட்ட பாலம் அமைக்கப்படும் என்றுதமிழக அரசால் அறிவிக்கப்பட்டு, கடந்த 2017-ம் ஆண்டு மண் பரிசோதனை நடைபெற்றது. எனினும், மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்படாமல் உள்ளதால், மேம்பாலம் அமைக்கும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, இரும்புலிச்சேரி கிராம மக்கள் கூறும்போது, "பாலாற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட தற்காலிக தரைப்பாலம்,நீரோட்டத்தால் பல்வேறு இடங்களில் சேதமடைந்துள்ளதால் வாகனங்களில் செல்லஅச்சமாக உள்ளது. போக்குவரத்து தடைபடும் நேரங்களில் கிராமத்தில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது. எனவே, உயர்மட்ட மேம்பாலம் அமைத்தால் மட்டுமே கிராம மக்களின் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும்" என்றனர்.

செங்கல்பட்டு மாவட்ட நெடுஞ்சாலைத் துறை சிறப்பு திட்ட பணிகள் உதவி பொறியாளர் இதுகுறித்து கூறும்போது, "இரும்புலிச்சேரி-நெரும்பூர் இடையே பாலாற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்காக மண் பரிசோதனை உள்ளிட்ட பூர்வாங்க பணிகள் நிறைவடைந்துள்ளன. மேலும், மேம்பாலம் அமைக்க ரூ.39.04 லட்சத்துக்கு திட்ட மதிப்பீடு தயாரித்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளோம். விரைவில் நிதி ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்புகள் வரும் என நம்புகிறோம்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x