Published : 03 Nov 2020 03:12 AM
Last Updated : 03 Nov 2020 03:12 AM

அரசு சார்பு நிறுவனத் தொழிலாளர்கள் திரண்டு வந்து போராட்டம் ஆளுநர் மாளிகை,சட்டப்பேரவை முற்றுகை புதுச்சேரியில் போலீஸார் தடியடி - பெண்கள் காயம்

புதுச்சேரி சட்டப்பேரவைக்குள் நுழைய முயன்ற தொழிற்சங்கத்தினர் மீது தடியடி நடத்தும் காவல்துறையினர்.

புதுச்சேரி

புதுச்சேரியில் ஆளுநர் மாளிகை,சட்டப்பேரவையை நேற்று தொழிலாளர்கள் முற்று கையிட்டனர். போலீஸார் அவர்கள் மீது தடியடி நடத்தி கைது செய்தனர். இச்சம்பவத்தில் பெண்கள் காயமடைந்தனர்.

புதுச்சேரி அரசு சார்பு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களும், அமைப்பு சாரா தொழிலாளர்களும் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு ஆளுநர் மாளிகை, சட்டப்பேரவை முன்பு முற்றுகையிட்டு, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் சட்டப்பேரவை, ஆளுநர் மாளிகையைச் சுற்றியுள்ள அனைத்து சாலைகளும் மூடப்பட்டன. தொழிலாளர்கள் நான்குபிரிவுகளாகப் பிரிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் போதிய அளவு பணியில் இல்லை.

ஏஐடியூசி பொதுச்செயலாளர் சேதுசெல்வம், சிஐடியூ செயலாளர் சீனுவாசன், ஐஎன்டியூசி பொதுச்செயலாளர் ஞானசேகரன், ஏஐசிசிடியூ மாநில தலைவர் மோதிலால், எல்எல்எப் மாநில செயலாளர் செந்தில், எம்எல்எப் மாநில செயலாளர் வேதா.வேணுகோபால், ஏடியூடியூசி மாநில செயலாளர் சிவக்குமார், அரசு ஊழியர் சம்மேளன தலைவர் பிரேமதாசன், புதுவை மாநில ஆட்டோ ஓட்டுனர் சங்க மாநில தலைவர் மணிவண்ணன் ஆகியோர் தலைமையில் திரண்ட போராட்டத்தினர் அரசுக்கு எதிராக முழக்கமிட்டு சட்டப்பேரவை நோக்கி வந்தனர்.

போராட்டத்தினர் இப்பகுதிசாலைகளில் ஆட்டோக்களை சாலை முழுவதும் நிறுத்தியிருந்தனர். கடும் போக்கு வரத்து நெரிசல் நகரப்பகுதியில் ஏற்பட்டிருந்தது. ஒரு கட்டத்தில் சட்டப்பேரவை முன்பாக வந்தோரை போலீஸார் அனுமதிக்காததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டத்தினரைக் கலைக்க போலீஸார் தடியடி நடத்தினர்.

உடனே தொழிலாளர்கள் தடுப்புகளைத் தாண்டி ஆளுநர் மாளிகையை நோக்கி சென்றனர். ஆளுநர் மாளிகை முன்பாக அமர்ந்தும் கடும் கோஷங்களை எழுப்பினர். போலீஸார் அவர்களை அகற்ற முற்பட்டனர். இதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இச்சம்பவத்தில் 3 பெண்களுக்கு காயம் ஏற்பட் டது. அதையடுத்து ஆளுநர் மாளிகையை நோக்கி அனைத்து தரப்பு தொழிலாளர்களும் வரத் தொடங்கியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீஸார் அவர்கள் மீது தடியடி நடத்தினர்.

எதற்காக இந்தப் போராட்டம்?

1) பாசிக், பாப்ஸ்கோ, காமராஜர் வேளாண் அறிவியல் நிலையம், புதுவை விற்பனைக்கு குழு , பஞ்சாலைகள், கூட்டுறவு சர்க்கரை ஆலை, அமுதசுரபி, கான்பெட், பாண்டெக்ஸ், பாண்பேப், காதி வாரியம், பிஆர்டிசி, ரேஷன் கடை உள்ளிட்ட புதுவை அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நிலுவை ஊதியத்தை தரவேண்டும்.

2) அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு உடனடியாக நலவாரியத்தை அமைக்க வேண்டும்.

3) அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் தீபாவளி உதவித்தொகையாக ரூ. 2 ஆயிரம் வழங்கிட வேண்டும்

4) ஏ. எப்.டி, சுதேசி, பாரதி மில்களை மூடுவதற்கு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, வேலையற்ற இளைஞர்களுக்கு வேலை தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் ஆவேசமடைந்த போராட்டத்தினர் ஆளுநர் மாளிகை கதவில் ஏறத்தொடங்கினர்.

போராட்டத்தினரைக் கட்டுப்படுத்த ஆயுதப்படை, ஐஆர்பிஎன்போலீஸார் அங்கு வரவழைக்கப் பட்டனர். ஆளுநர் மாளிகை, சட்டப்பேரவையைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. தடியடியைத் தொடர்ந்து அப்பகுதியில் பொருட்கள், கொடிகள் சிதறி கிடந்தன.

புதுச்சேரி சட்டப்பேரவை, ஆளுநர் மாளிகையைச் சுற்றி போராட்டத்தில் ஈடுபட்டோரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீஸார் இறங்கினர். ஏராளமா னோரை போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x