Published : 03 Nov 2020 03:13 AM
Last Updated : 03 Nov 2020 03:13 AM

செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு ஈரோட்டில் மக்கள் தர்ணா போராட்டம்

ஈரோடு பெரியசேமூர் பச்சைப்பாளிமேட்டில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தர்ணாவில் ஈடுபட்ட பொதுமக்கள்.

ஈரோடு: ஈரோட்டில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு பெரியசேமூர் பச்சைப்பாளி மேட்டில் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அந்த பகுதியில் தனியார் நிறுவனம் செல்போன் நிறுவனத்தின் கோபுரம் அமைப்பதற்கான பணிகளை நேற்று தொடங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கூறியதாவது:

இங்கு பெரும்பாலானோர் விவசாயம் செய்து வருகின்றனர். இப்பகுதியில் செல்போன் கோபுரம் அமைத்தால், அதில் ஏற்படும் கதிர்வீச்சால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுவார்கள். மேலும் கால்நடைகளும் பாதிக்கப்படும். செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். வழக்கு நிலுவையில் உள்ளநிலையில், நிறுவனத்தினர் திடீரென பணிகளை தொடங்கியதால் போராட்டத்தில் ஈடுபடுகிறோம், என்றனர்.

போராட்டம் குறித்து தகவல் அறிந்து வந்த ஈரோடு வடக்கு போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், நீதிமன்றத்தில் பொதுமக்கள் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு வரும் வரை எவ்வித பணியையும் மேற்கொள்ளக்கூடாது என செல்போன் நிறுவன ஊழியர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து, பணி கைவிடப்பட்டது. பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x