Published : 03 Nov 2020 03:13 AM
Last Updated : 03 Nov 2020 03:13 AM

நுகர்பொருள் வாணிப கிட்டங்கியிலிருந்து வெளிவரும் பூச்சிகளால் பாதிக்கப்படுவதாக சிவந்திப்பட்டி மக்கள் புகார்

நுகர்பொருள் வாணிப கிட்டங்கியில் இருந்து வரும் வண்டுகள், பூச்சிகளால் இன்னல்களுக்கு ஆளாவதாக ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்த சிவந்திபட்டி மக்கள். (வலது)ஊரக வேலை உறுதி திட்டத்தில் முறைகேடு நடப்பதாக புகார் அளித்த வெங்கடராயபுரம் ஊராட்சி மக்கள். படங்கள்: மு.லெட்சுமி அருண்

திருநெல்வேலி

திருநெல்வேலி அருகே முத்தூர் பகுதியில் உள்ள நுகர்பொருள் வாணிப கிட்டங்கியில் இருந்து வரும் வண்டுகள், பூச்சிகளால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதாக சிவந்திபட்டி கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

மனு விவரம்: சிவந்திபட்டியில் கடந்த 2018-ம் ஆண்டு அரசு அளித்த இலவச வீட்டுமனை பட்டா இடத்தில் பொதுமக்கள் வீடுகள் கட்டி குடியிருக்கின்றனர். இதன் அருகில் முத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கி அமைந்துள்ளது. அங்கிருந்து வெளியேறும் வண்டுகள், விஷ பூச்சிகள் குடியிருப்புகளுக்குள் புகுவதால் அவதிக்கு ஆளாக நேரிடுகிறது. வீடுகளில் உள்ள தண்ணீர், உணவு பொருட்கள், துணிகளில் வண்டுகள், பூச்சிகள் விழுகின்றன. இரவு நேரங்களில் அதிகளவில் வண்டுகளும், பூச்சிகளும் வருவதால் தூக்கம் கெடுகிறது. எனவேநுகர்பொருள் வாணிப கிட்டங்கியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை சிறுத்தைகள்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்டச் செயலாளர் மா.இரணியன் உள்ளிட்டோர் அளித்த மனு விவரம்: நாங்குநேரி ஊராட்சி ஒன்றியத்தில் வெங்கடராயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரக வேலை உறுதி திட்டத்தில் பல லட்சம் முறைகேடு நடைபெற்றுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பணத்தை திரும்ப வசூல் செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதித்தமிழர் பேரவை

ஆதித்தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் கு.கி.கலைகண்ணன் தலைமையில் ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் மற்றும் பழங்குடி மாணவ, மாணவியரின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உரிமைகளை காக்க வேண்டும் என, ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இந்து மக்கள் கட்சி

திருநெல்வேலி மணிமூர்த்தீஸ்வரத்தில் கிறிஸ்தவ கல்லறைகளை சேதப்படுத்தியது தொடர்பாக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்.

உச்சிஷ்ட கணபதி கோயிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்க வேண்டும். கோயிலுக்கு அருகிலுள்ள கல்லறைத் தோட்டத்தை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி, அக் கட்சியின் திருநெல்வேலி மாநகர் மாவட்டத் தலைவர் ஜெ.வி.மாரியப்பன் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

மின் இணைப்பு வழங்க வேண்டும்

மனிதநேய மக்கள் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட மனு விவரம்: மேலப்பாளையத்தில் ஹாமிம்புரம், ஞானியாரப்பா நகர், பங்களாப்ப நகர் பகுதிகளில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.

இங்குள்ள காலி மனைகளில் கட்டப்படும் வீடுகளுக்கு மின்வாரியம் மின் இணைப்பு வழங்கி வந்தது. தற்போது சில மாதங்களாக புதிய மின் இணைப்பு வழங்க மின்வாரியம் மறுத்து வருகிறது.

இதனால் இங்கு புதிய வீடுகள் கட்டுவோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, காலதாமதமின்றி மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட் டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x