Published : 02 Nov 2020 03:14 AM
Last Updated : 02 Nov 2020 03:14 AM
சேலம் மாநகரம் மற்றும் மாவட்டத்தின் முக்கிய நகரங்களில் தீபாவளி பொருட்கள் விற்பனையால் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. குற்றங்களை தடுக்க போலீஸார் உயர் கோபுரங்கள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தீபாவளி கொண்டாட்டத்துக்கு இன்னும் 12 நாட்கள் உள்ள நிலையில், பண்டிகை கொண்டாட்டத்துக்குத் தேவையான புதிய ஆடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்டவைகளை வாங்குவதில் மக்கள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். நேற்று ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாள் என்பதால், சேலத்தில் ஜவுளிக் கடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள், செல்போன் கடைகள் அதிகமுள்ள கடை வீதி, முதல் அக்ரஹாரம், 2-வது அக்ரஹாரம், 5 ரோடு, புதிய பேருந்து நிலைய பகுதிகளில் உள்ள முக்கிய வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கையாக பொதுமக்கள் பலர் முகக் கவசம் அணிந்து கடை வீதிகளுக்கு வந்து சென்றனர். எனினும், கூட்டம் அதிகமாக இருந்ததால் சமூக இடைவெளியைப் பின்பற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனிடையே, கரோனா ஊரடங்கினால் கடந்த 7 மாதங்களாக, விற்பனை குறைந்திருந்த கடைகளில் தற்போது வியாபாரம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
போலீஸ் கண்காணிப்பு
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, சேலம் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால், திருட்டு உள்ளிட்ட குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் மாநகர போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடை வீதி, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் என முக்கிய இடங்களில் உயர் கோபுரங்கள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், முக்கிய சாலை சந்திப்புகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
நேற்று முன்தினம் போலீஸார் நடத்திய சோதனையில், 11 ரவுடிகள், சந்தேக நபர்கள் 17 பேர், நீதிமன்ற பிடியாணை உள்ள 17 பேர் என மொத்தம் 53 பேரை கைது செய்தனர். மாநகரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு ரவுடிகளால் அச்சுறுத்தல், மிரட்டல் ஏற்பட்டால், மாநகர காவல் அலுவலகத்தில் நேரில் அல்லது 100, 94981 00945 என்ற எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம் என மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT