Published : 01 Nov 2020 03:13 AM
Last Updated : 01 Nov 2020 03:13 AM
நீலகிரி மாவட்டம் தேவர்சோலை எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த ரோகிணி, கோவை மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
கோவை அவிநாசி சாலையில் உள்ள பிரபல டி.வி தயாரிப்பு நிறுவனத்தின் ஷோரூமில் 55 அங்குல எல்இடி டிவியின் விலையை கேட்பதற்காக 2019 ஜூலை 12-ம் தேதி சென்றேன். விசாரித்துவிட்டு வெளியே வர முயன்றபோது கடையின் விற்பனை பிரதிநிதி, மாதாந்திர தவணைத் தொகை செலுத்த ஏதுவாக எனதுகிரெடிட் கார்டு விவரத்தை சரிபார்க்க வேண்டும் என்று கேட்டு கார்டை பெற்றுக்கொண்டார். பின்னர், 8 மாத தவணை அல்லது 12 மாத தவணை, இந்த இரண்டில் எதை நீங்கள் தேர்வு செய்வீர்கள் என்று கேட்டார். நான் டி.வி. வாங்கினால் 12 மாதங்களை தேர்வு செய்வேன் என்றேன். உடனே, கார்டின் ‘பின்’ நம்பரை ஸ்வைப்பிங் இயந்திரத்தில் பதிவு செய்யுமாறு கூறினார்.
அப்போது, இ.எம்.ஐ கட்ட தகுதி இருக்கிறதா என்பதை அறிய ‘பின்’ நம்பர் தேவையா என்று கேட்டேன். இருப்பினும், டி.வி. விலையை மட்டுமே கேட்டுஅறிந்துகொள்ள வந்த எனது கணக்கில் இருந்து ரூ.47 ஆயிரம் பிடித்தம் செய்யப்பட்டது. உடனடி யாக, அந்த பணத்தை மீண்டும் எனது கணக்கில் செலுத்துமாறு தெரிவித்தேன். ஆனால், ஜூலை 15-ம் தேதிதான் எனது கணக்கில் பணம் செலுத்தப்பட்டது. அதோடு, எனது கணக்கில் இருந்து கூடுதலாக ரூ.940-ஐ பிடித்தம் செய்துகொண்டனர். கேட்டபோது, டி.வி. வாங்குவதற்கான முன்பணம் அது என்று தெரிவித்தனர்.
என்னிடமிருந்து முறையற்ற வகையில் கூடுதலாக பிடித்தம் செய்யப்பட்ட தொகையை திருப்பி அளிக்குமாறு ஷோரூமுக்கு நோட்டீஸ் அனுப்பினேன். அதற்கு அவர்கள் எந்த பதிலும் அளிக்கவில்லை. எனவே, எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த கோவை மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தின் தலைவர் ஏ.பி.பாலசந்திரன், உறுப்பினர் சி.சரஸ்வதி ஆகியோர், “மனுதாரரின் ஒப்புதல் இல்லாமல் அவரது கிரெடிட் கார்டில் இருந்து கட்டாயமாக பணத்தை எடுத்துக் கொண்டது நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி விதிமீறலாகும். எனவே, மனுதாரரிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட ரூ.940-ஐ 15 சதவீத வட்டியுடன் ஷோரூம் நிர்வாகம் திருப்பி அளிக்க வேண்டும். அதோடு, மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.1 லட்சம் வழங்க வேண்டும். வழக்குச் செலவாக ரூ.2,500 அளிக்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT