Published : 01 Nov 2020 03:13 AM
Last Updated : 01 Nov 2020 03:13 AM
‘இந்து தமிழ்’ செய்தி எதிரொலியால் கோவையில் இருந்து பில்லூர் அணைக்கு மீண்டும் பேருந்து சேவை தொடங்கியுள்ளது.
கரோனா கால ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, செப்டம்பர் 1-ம் தேதி முதல் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன. ஆனால், கோவை மற்றும் மேட்டுப்பாளையத்தில் இருந்து பில்லூர் அணை பகுதிக்கு இயக்கப்படும் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால், பில்லூர் அணை மற்றும் வழியில் உள்ள குண்டூர், கெத்தைகாடு, முள்ளி, கோரப்பதி, பரளிக்காடு, பூச்சிமரத்தூர், நெல்லிமரத்தூர், வெள்ளியங்காடு உள்ளிட்ட பகுதிகளைச் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் அவதிக்குள்ளாகினர். அவசர தேவைக்காக ஜீப்பில் அதிக வாடகை செலுத்தி பயணித்தனர். எனவே, ஒரு பேருந்தையாவது இயக்கினால் உதவியாக இருக்கும் என பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்த செய்தி, ‘இந்து தமிழ்’ நாளிதழில் கடந்த அக்டோபர் 27-ம் தேதி வெளியாகி இருந்தது. இதன் எதிரொலியாக பில்லூருக்கு கடந்த 28-ம் தேதி முதல் மீண்டும் பேருந்து சேவை தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக பில்லூர் பகுதி மக்கள் கூறும்போது, “செய்தி வெளியிட்ட ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கும், உடனடியாக நடவடிக்கை எடுத்த அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT