Published : 01 Nov 2020 03:13 AM
Last Updated : 01 Nov 2020 03:13 AM
தனது உடல் நிலை குறித்த உண்மையை அறிக்கையாக வெளியிட்டதன் மூலம் அரசியலுக்கு வர நடிகர் ரஜினி பயப்படுவதாக அர்த்தம் கொள்ளக்கூடாது என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறினார்.
திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் நேற்று காலை சுவாமி தரிசனம் செய்த அமைச்சர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
முதல்வர் பழனிசாமி ஆட்சியில் தமிழகமும், பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியாவும் பாதுகாப் பாக உள்ளது. மக்கள் சுபிட்சமாக வாழ்கிறார்கள். எனவே யாரும் யாரையும் மீட்க வேண்டியதில்லை.
அதிமுக கூட்டணி வலுவான மெகா கூட்டணி. 2021-லும் அதிமுக மூன்றாவது முறையாக வெற்றி பெற்று, பழனிசாமி மீண்டும் முதல்வராக வருவார். அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு பெற்றுத் தந்ததில் எதிர்க்கட்சிகளுக்கு எந்தப் பங்கும் இல்லை. ஸ்டாலினின் தப்பாட்டம் இனி மக்களிடம் எடுபடாது. எப்படியும் முதல்வராகிவிடலாம் என்ற அவரது நப்பாசை பலிக்காது.
நடிகர் ரஜினி தனது உடல் நிலை குறித்த தகவல்கள் வெளியானவுடன் வெளிப்படைத் தன்மையுடன் அதனை உண்மை என ஒத்துக் கொண்டுள்ளார். அவரது பேச்சில் நியாயம் இருக்கிறது. இன்றைய சூழ்நிலையில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மக்களையும் சந்திக்காமல் இயக்கம் ஆரம்பிப்பது கஷ்டம்.
கரோனா காலத்தில் தமிழகம் முழுவதும் சுற்றிவர அவரது உடல் நிலை ஒத்துவருமா என்று அவரது நண்பர்கள் அச்சப்படுகிறார்கள். அதன் வெளிப்பாடு தான் அறிக்கையாக வந்துள்ளது. இதனால் அவர் பயப்படுகிறார் என்று அர்த்தமல்ல.
மொத்தத்தில் ரஜினி அரசியலு க்கு வந்தாலும், வராவிட்டாலும் ஏற்றுக் கொள்வோம், எனவே, அவர் நியாயமான முடிவைத் தான் எடுப்பார். நல்லாட்சி செய்பவர்களைத் தான் அவர் என்றும் ஆதரிப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT