Published : 31 Oct 2020 03:13 AM
Last Updated : 31 Oct 2020 03:13 AM

வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்ள கோவையில் தயார் நிலையில் அரசு துறைகள் சிறப்பு கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்

கோவை

வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து, அதை எதிர்கொள்வதற்கு தேவையான நடவடிக்கையை கோவை மாவட்ட நிர்வாகத்தினர் தீவிரப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலக உயரதிகாரி ஒருவர் ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் கூறியதாவது:

மாவட்டத்தில் பருவமழையை எதிர்கொள்ள தாலுகா வாரியாக, துணை ஆட்சியர் அந்தஸ்திலான அதிகாரிகள் சிறப்பு கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, மேட்டுப்பாளையம் தாலுகாவுக்கு மாவட்ட வழங்கல் அலுவலர், அன்னூர் தாலுகாவுக்கு ஆய்வுக் கட்டுப்பாட்டுக் குழு அலுவலர், கோவை வடக்கு தாலுகாவுக்கு வடக்கு வருவாய் கோட்டாட்சியர், தெற்கு தாலுகாவுக்கு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர், சூலூர் தாலுகாவுக்கு சமூகப் பாதுகாப்புப் பிரிவு சிறப்பு துணை ஆட்சியர், பேரூருக்கு தெற்கு வருவாய் கோட்டாட்சியர், மதுக்கரைக்கு தாட்கோ மேலாளர், கிணத்துக்கடவுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர், பொள்ளாச்சிக்கு கோவை துணை ஆட்சியர், வால்பாறைக்கு நிலவரிப் பிரிவு உதவி ஆணையர், ஆனைமலை தாலுகாவுக்கு சர்வே பிரிவு உதவி இயக்குநர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுடன், மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி ஆலோசனை நடத்தி, பருவமழையை எதிர்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்து அறிவுறுத்தியுள்ளார்.

சிறப்பு கண்காணிப்பு அலுவலர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள உள்ளாட்சித் துறையினர், காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர், மின் வாரியத்தினர், நெடுஞ்சாலைத் துறையினர், மருத்துவத் துறையினர், பள்ளிக் கல்வித் துறையினருடன் இணைந்து செயல்படுவர்.

பருவமழையால் பாதிப்புக்குள்ளாக வாய்ப்புள்ள இடங்களாக மேட்டுப்பாளையம் தாலுகாவில் 11, வால்பாறை தாலுகாவில் 3, பேரூர் தாலுகாவில் 3, ஆனைமலை தாலுகாவில் ஓர் இடம் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன. இங்கு தேவையான தங்குமிடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

பாதிப்பு குறித்து உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் அளிக்க மேட்டுப்பாளையத்துக்கு 110 பேர், வால்பாறைக்கு 20 பேர், பேரூருக்கு 30 பேர், ஆனைமலைக்கு 5 பேர் என பொதுமக்கள் 145 பேர் தயார்படுத்தப்பட்டுள்ளனர். ஆற்றோரப் பகுதிகள், நீர் வழித்தடங்களுக்கு அருகேயுள்ள பகுதிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

மழைநீர் வடிகால்களை சுத்தப்படுத்தி, தடையின்றி நீர் செல்ல தயார்படுத்தி வைக்கவும், மழைநீர் தேங்கினால் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த தேவையான கழிவுநீர் அகற்றும் இயந்திரம், வாகனங்கள், மீட்புக் குழுவினர் எந்நேரமும் தயார் நிலையில் இருக்கவும் அந்தந்த உள்ளாட்சித் துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த முறை பருவமழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் தற்போதும் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x